குழந்தையை கொன்று உடலை தெர்மாகோல் பெட்டியில் வைத்து கால்வாயில் வீச்சு


குழந்தையை கொன்று உடலை தெர்மாகோல் பெட்டியில் வைத்து கால்வாயில் வீச்சு
x

குழந்தையை கொன்று உடலை தெர்மாகோல் பெட்டியில் வைத்து கழிவுநீர் கால்வாயில் வீசிய சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

சிவமொக்கா

சிவமொக்காவில், குழந்தையை கொன்று உடலை தெர்மாகோல் பெட்டியில் வைத்து கழிவுநீர் கால்வாயில் வீசிய சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

கழிவுநீர் கால்வாய்

சிவமொக்கா டவுனில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கால்வாய்கள் அனைத்திலும் நீர் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நிலையில் சிவமொக்கா டவுன் ஆர்.எம்.எல். நகர் பகுதியில் உள்ள மசூதியின் பின்புறம் கழிவு நீர் கால்வாயில் தெர்மாகோல் பெட்டி ஒன்று மிதந்து வந்தது.

அதைப்பார்த்த பொதுமக்கள் பெட்டியை எடுத்தனர். பின்னர் அதன் உள்ளே பார்த்தபோது, பச்சிளம் ஆண் குழந்தையின் உடல் இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனே இதுபற்றி சிவமொக்கா டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

குழந்தை கொலை

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் குழந்தை பிறந்து 2 மாதம் இருக்கும் என்று தெரியவந்தது.


மேலும் அந்த குழந்தையை கொன்று உடலை தெர்மாகோல் பெட்டியில் வைத்து கழிவுநீர் கால்வாயில் வீசியிருப்பதும் தெரியவந்தது. ஆனால் குழந்தையின் தாய் யார்?, கள்ளக்காதலில் பிறந்ததால் அந்த குழந்தையை கொன்றனரா? என்ற பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுபற்றி சிவமொக்கா டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் தாய் யார் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

=================


Next Story