கர்நாடகத்தில் ஆதிதிராவிடர்களுக்கு அநீதி- காங்கிரஸ் குற்றச்சாட்டு
கர்நாடகத்தில் ஆதிதிராவிடர்களுக்கு அநீதி ஏற்படுவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு வைத்துள்ளது.
பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவர் துருவநாராயண் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- கர்நாடகத்தில் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினருக்கு தொடர்ந்து அநீதி ஏற்பட்டு வருகிறது. அதனால் அந்த மக்கள் அனாதைகளாக மாறியுள்ளனர். இந்த அநீதிக்கு எதிராக பா.ஜனதா தலைவர்கள் குரல் கொடுக்காதது ஏன்?. இத்தகையவர்கள் காங்கிரசுக்கு எதிராக விமர்சிக்க முடியுமா?. ஒவ்வொருவருக்கும் சுயமரியாதை இருக்க வேண்டும். சுயமரியாதை இல்லாதவரின் வாழ்க்கை பூஜ்ஜியத்திற்கு சமமானது.
பா.ஜனதா கட்சியில் உள்ள ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் இதுகுறித்து குரல் எழுப்பாமல் உள்ளனர். இதன் மூலம் அவர்கள் தங்களை தாங்களே ஏமாற்றி கொள்கிறார்கள். கடந்த 2013-ம் ஆண்டு சித்தராமையா ஆட்சியில் இருந்தபோது மக்கள்தொகைக்கு ஏற்ப ஆதிதிராவிடர்-பழங்குடியினருக்கு நிதி ஒதுக்கீடு செய்ய சட்டம் கொண்டு வரப்பட்டது. பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கவில்லை. பா.ஜனதாவுக்கு சித்தராமையாவை கண்டாலே பயம். சமீபத்தில் மேல்-சபைக்கு தேர்தல் நடைபெற்றது. 4 தொகுதிகளில் இரண்டில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
இவ்வாறு துருவ நாராயண் கூறினார்.