கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழையின் தீவிரம் குறைந்தது- வானிலை ஆய்வு மையம் தகவல்
கர்நாடகத்தில் தென்மேற்கு பருமழையின் தீவிரம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்தது. மாநிலம் முழுவதும் இயல்பை விட கூடுதலாக மழை பெய்துள்ளது. இதனால் அணைகள், ஏரி, குளங்கள், நீர் நிலைகள் என அனைத்தும் நிரம்பி வழிகின்றன. கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பல பகுதிகளில் நீரில் மூழ்கின. மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தலைநகர் பெங்களூருவில் கடந்த வாரம் பெய்த கனமழையால் ரெயின்போ லே-அவுட் உள்பட பல்வேறு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.
இந்த நிலையில் கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழையின் தீவிரம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதாவது கடலோர மாவட்டங்கள் மற்றும் வட கர்நாடகத்தின் உள்மாவட்டங்களில் பருவமழை குறைந்துள்ளதாக அந்த மையம் தெரிவித்துள்ளது. காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தட்சிண கன்னடா, உத்தரகன்னடா, சிக்கமகளூரு, மைசூரு, சிவமொக்கா, தாவணகெரே, சித்ரதுர்கா உள்ளிட்ட மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்துள்ளது.
கர்நாடகத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கடலோர மாவட்டங்கள் மற்றும் மாநிலத்தின் உள்மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. பெங்களூருவை பொறுத்தவரையில் இன்று சில நேரத்தில் லேசான மழை பெய்யலாம் அந்த மையம் கூறியுள்ளது.