நிபா வைரஸ் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை - மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா தகவல்


நிபா வைரஸ் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை - மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா தகவல்
x

நிபா வைரஸ் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

கேரள மாநிலத்தில் இதுவரை 5 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 2 பேர் உயிரிழந்த நிலையில், 9 வயது சிறுவன் உள்பட 3 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நிபா வைரஸ் பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் யாருக்காவது காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பதை கண்டறியும் பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நிபா வைரஸ் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-

"கொரோனா தொற்று பரவல் நமக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்துள்ளது. நமது பலவீனங்களை நமக்கு தெரிய வைத்ததோடு, சிறந்த கண்காணிப்பு அமைப்புகளை உருவாக்குவதற்கும் கொரோனா தொற்று வழிவகுத்தது.

ஒரு சிறு கிராமத்தில் தொற்று பரவல் ஏற்பட்டாலும், உடனடியாக மத்திய நிர்வாகத்திற்கு தகவல் சென்றடையும் வகையிலான அமைப்பை அரசாங்கம் இப்போது அமைத்துள்ளது. மத்திய அரசு ரூ.100 கோடி செலவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பரிசோதனைக்காக ஆய்வகங்களை அமைத்து வருகிறது.

கோழிக்கோடு பகுதியில் தற்போது நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் கிடைத்ததும் உடனடியாக நடவடிக்கை எடுத்தோம். எங்கள் குழுக்கள் அங்கு சென்றுள்ளன. மாநில மற்றும் மத்திய அரசுகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன. நிபா வைரஸ் பாதிப்பு பரவாமல் இருப்பதை உறுதிப்படுத்த தேவையான அனைத்தையும் செய்வோம்."

இவ்வாறு மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

1 More update

Next Story