தமிழக ஐ.பி.எஸ் அதிகாரி முனிராஜ்க்கு காசியாபாத் மூத்த எஸ்.பி.யாக முழு அதிகாரம் வழங்கி யோகி ஆதித்யநாத் உத்தரவு!
தமிழகத்தை சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி ஜி.முனிராஜ் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அ.பாப்பாரப்பட்டியின் விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார்.
லக்னோ,
உத்தரபிரதேசத்தில் உள்ள காசியாபாத்தில் சமீபகாலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினை அதிகரிப்பதாக புகார் எழுந்தது. முன்னதாக, கொலை, கொள்ளை, வழிபறி அதிகரித்துள்ளதாக கூறி, காசியாபாத் மாவட்ட எஸ்.எஸ்.பி.யான பவன்குமாரை உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பணியிடை நீக்கம் செய்தார்.
இதனையடுத்து அந்த பொறுப்பு, லக்னோ உளவுப்பிரிவு தலைமையகத்தின் எஸ்.பி. ஆக பணியாற்றி வந்த தமிழகத்தை சேர்ந்த போலீஸ் ஐ.பி.எஸ் அதிகாரி ஜி.முனிராஜிடம் ஏப்ரல் 3-ல் ஒப்படைக்கப்பட்டது.
இவரிடம் ஏற்கெனவே ஆக்ரா மாவட்ட உளவுப்பிரிவு பொறுப்பும் இருந்தது. இதனிடையே, கூடுதல் பொறுப்பாக இடைக்கால எஸ்.எஸ்.பி.யாக இருந்து வந்த தமிழர் முனிராஜ், காசியாபாத்தின் சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டுவரக் கடுமையாக முயற்சித்து வந்தார்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியை ஒட்டியுள்ள காசியாபாத் எஸ்எஸ்பியாக முழு பொறுப்பையும் முனிராஜிடம் ஒப்படைத்ததுடன் அவரை உளவுப்பிரிவு பணியிலிருந்து விலக்கி முதல்-மந்திரி யோகி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி ஜி.முனிராஜ் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அ.பாப்பாரப்பட்டியின் விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டமும், அரியானாவில் முதுகலை பட்டத்தையும் பெற்ற முனிராஜ், 2009-ல் ஐபிஎஸ் தேர்ச்சி பெற்றார்.
அவர் ஏற்கெனவே பணியாற்றிய புலந்த்ஷெஹர், பரேலி மற்றும் அலிகர் மாவட்டங்களிலும் பல்வேறு என்கவுன்டர்களை நடத்தியவர். மத நல்லிணக்கத்தை குலைக்க முயன்றதாக பாஜக நிர்வாகிகள் மீதும் பல்வேறு வழக்குகளையும் பதிவு செய்திருந்தார். கோவையில் கொள்ளை போன ரூ.44 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை மீட்டு தமிழக போலீசாரிடம் ஒப்படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.