அரசு தேர்வை முன்னிட்டு அசாமின் 27 மாவட்டங்களில் இணைய சேவை முடக்கம்..!
அசாமில் 2-வது முறையாக இன்றும் அரசு தேர்வின் போது 27 மாவட்டங்களில் இணைய சேவைகள் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக துண்டிக்கப்பட்டது.
கவுகாத்தி,
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் இடைநிலைக் கல்வி வாரியம், அசாம் (எஸ்இபிஎ) நடத்தும் அரசின் பல்வேறு துறைகளில் குரூப்-3, குரூப்-4 பிரிவில் காலியாக உள்ள சுமார் 30 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வை சுமார் 14 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
இதில் குரூப்-4 தேர்வுகள் கடந்த 21-ந்தேதி இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இந்த நிலையில் குரூப்-3 தேர்வுகள் இன்று நடைபெறுகின்றன. மேலும் வருகிற செப்டம்பர் 11-ந்தேதியும் குரூப்-3 பதவிகளுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன.
கடந்த வாரம் நடைபெற்ற தேர்வின் போது முறைகேடுகளை தடுப்பதற்காக அசாம் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி, தேர்வு மையங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் காலை முதல் தேர்வு முடியும் வரை இணைய சேவை துண்டிக்கப்பட்டது. அதேபோல் தேர்வு மையங்கள் அமைந்துள்ள வளாகங்களை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த நடைமுறையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரித்த கவுகாத்தி ஐகோர்ட்டு இந்த நடைமுறைக்கு தடை விதிக்க மறுத்து உத்தரவிட்டது. இதையடுத்து இரண்டாவது முறையாக இன்றும் தேர்வின் போது 27 மாவட்டங்களில் இணைய சேவைகள் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக துண்டிக்கப்பட்டது. மேலும், தேர்வுகள் நடைபெறும் 27 மாவட்டங்களிலும் 144 பிரிவின் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.