திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் பொருட்கள், செல்போன்களை கையாள 'டிஜிட்டல்' முறை அறிமுகம்
ஒருசில பக்தர்கள் கோவிலுக்குள் செல்போன்களை கொண்டு செல்கிறார்கள்.
திருமலை,
ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் பொருட்கள், செல்போன்களை கவுண்ட்டர்களில் டெபாசிட் செய்து, திரும்ப பெற 'பாலாஜி பேக்கேஜ் மேனேஜ்மென்ட் சிஸ்டம்' என்ற டிஜிட்டல் மற்றும் தானியங்கி முறையை தேவஸ்தானம் அறிமுகப்படுத்தி உள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.
திருமலை அன்னமய பவனில் பக்தர்களிடம் இருந்து குறைகள் கேட்கும் (டயல் யுவர் இ.ஓ) நிகழ்ச்சி நடந்தது. அதில் தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பங்கேற்று பக்தர்களிடம் இருந்து குறைகளை கேட்கும் முன் பேசியதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 18-ந்தேதியில் இருந்து 26-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழாவும், அக்டோபர் மாதம் 15-ந்தேதியில் இருந்து 23-ந்தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவ விழாவும் நடக்கின்றன. அதனுடன் தமிழ் புரட்டாசி மாத சனிக்கிழமைகளும் வருகின்றன.
பிரம்மோற்சவ விழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் திருமலைக்கு வருவார்கள், என எதிர்பார்க்கப்படுவதால், பக்தர்கள் வசதிக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
சனாதன இந்து தர்ம மரபுகளின்படி ஸ்ரீவாணி அறக்கட்டளையில் இருந்து பின்தங்கிய பகுதிகளில் கட்டப்பட்டுள்ள 501 கோவில்களில் தூபம், தீபம் மற்றும் நைவேத்தியத்துக்காக தேவஸ்தானம் நிதி உதவி வழங்கி வருகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் பெட்டிகள், பைகள் உள்ளிட்ட பொருட்கள், செல்போன்களை பாதுகாத்து வழங்க தேவஸ்தானம் பாலாஜி பேக்கேஜ் மேனேஜ்மென்ட் சிஸ்டம் என்ற டிஜிட்டல் மற்றும் தானியங்கி முறையை அறிமுகப்படுத்தி உள்ளது.
இது, பக்தர்கள் கொண்டு வரும் பொருட்கள் மற்றும் செல்போன்களை எளிதாகவும், வசதியாகவும் பொருட்கள் பாதுகாப்பு கவுண்ட்டர்களில் டெபாசிட் செய்வதற்கும், பின்னர் அதை திரும்ப பெறுவதற்கும் ஆகும்.
ஒருசில பக்தர்கள் கோவிலுக்குள் செல்போன்களை கொண்டு செல்கிறார்கள். ஆனால், புதிய முறையில், திருமலை மற்றும் திருப்பதியில் உள்ள 16 மையங்களில் 44 கவுண்ட்டர்களில் பக்தர்கள் தங்கள் பொருட்கள் மற்றும் செல்போன்களை டெபாசிட் செய்து திரும்பப் பெற முடியும். திருப்பதி தேவஸ்தானம் தினமும் 60 ஆயிரம் செல்போன்கள் மற்றும் பொருட்கள் அடங்கிய 40 ஆயிரம் பை, பெட்டிகளை பராமரிக்கிறது.
திருப்பதி தேவஸ்தானம் ஸ்ரீவெங்கடேஸ்வரா பாரம்பரிய சிற்பம் மற்றும் கட்டிடக்கலை கல்லூரியில் சிலைகள் மற்றும் கோவில் கட்டிடங்களை உருவாக்குவது குறித்து நாளை (திங்கட்கிழமை) முதல் 6-ந்தேதி வரை 3 நாட்கள் பயிலரங்கை நடத்த திட்டமிட்டுள்ளது.
பயிலரங்கில் ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த நிபுணர்கள், சிற்பிகள் மற்றும் ஸ்தபதிகள் பங்கேற்று புதிய திறன்கள் மற்றும் கோவில் கட்டும் நுட்பங்களை வழங்குவார்கள். சிற்ப கல்லூரி மாணவர்களால் உருவாக்கப்பட்ட பல்வேறு வகையான சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்படும்.
திருப்பதி சுவிம்ஸ் மருத்துவமனை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான சிறந்த உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளது. உண்மையான தேவை உள்ள நபர்களின் மனிதாபிமான நலனுக்காக மரணத்தின் விளிம்பில் உள்ளவர்களின் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.