உடுப்பி கல்லூரி மாணவி ஆபாச வீடியோ வழக்கில் விசாரணை அதிகாரி மாற்றம்


உடுப்பி கல்லூரி மாணவி ஆபாச வீடியோ வழக்கில் விசாரணை அதிகாரி மாற்றம்
x
தினத்தந்தி 29 July 2023 6:45 PM GMT (Updated: 29 July 2023 6:46 PM GMT)

உடுப்பி கல்லூரி மாணவி ஆபாச வீடியோ வழக்கில் விசாரணை அதிகாரியாக குந்தாபுரா துணை போலீஸ் சூப்பிரண்டு பெல்லியப்பாவை நியமித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அக்‌ஷய் மச்சீந்திரா உத்தரவிட்டுள்ளார்.

உடுப்பி:-

ஆபாச வீடியோ வழக்கு

உடுப்பி மாவட்டம் அம்பலபாடி பகுதியில் தனியார் பாராமெடிக்கல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியை சேர்ந்த 3 மாணவிகள், கல்லூரி கழிவறையில் செல்போன் கேமராவை வைத்து சக மாணவியை ஆபாசமாக வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ கல்லூரி ஆண் நண்பர்களின் வாட்ஸ் அப் குழுவில் வெளியானது. இதையடுத்து இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவிகள் 3 பேரையும் கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்தது. இந்தநிலையில் மாணவர்கள் அமைப்பினர் மற்றும் பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட மாணவிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

அதன்படி மல்பே போலீசார் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கல்லூரிக்கு ெசன்று விசாரணை நடத்தினர். அப்போது மாணவிகளின் செல்போன்கள், சக மாணவர்களின் செல்போன்களை போலீசார் வாங்கி ஆய்வு செய்தனர். மேலும் 3 மாணவிகளின் செல்போன்களை கைப்பற்றிய போலீசார் அதை தடய அறிவியல் ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பும் வந்து விசாரணை நடத்தி சென்றார்.

விசாரணை அதிகாரி மாற்றம்

இருப்பினும் இந்த விசாரணையில் நம்பிக்கை இல்லை. விசாரணை அதிகாரியை மாற்றவேண்டும். கல்லூரி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாணவிகள் மற்றும் மாணவர்கள் அமைப்பினர் வலியுறுத்தி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று விசாரணை அதிகாரியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அக்ஷய் மச்சீந்திரா மாற்றி உத்தரவிட்டுள்ளார். அதன்படி விசாரணை அதிகாரியாக இருந்த மல்பே இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத்தை விடுவித்துவிட்டு, அவருக்கு பதிலாக குந்தாபுரா துணை போலீஸ் சூப்பிரண்டு பெல்லியப்பாவை நியமித்து உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து இது நடந்த விசாரணை தொடர்பான ஆவணங்களை பெற்று கொண்ட பெல்லியப்பா, கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது கல்லூரி கழிவறைக்கு சென்று ஆய்வு செய்தார். பின்னர் கல்லூரி மற்றும் அதனை சுற்றி வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் சம்பவத்தன்று யார், யார் கல்லூரிக்கு வந்து சென்றனர். மாணவர்களிடம் யார் யார் வந்து பேசினர் ஆகியவற்றை போலீசார் ஆய்வு செய்தனர்.

3 மாணவிகளிடம் விசாரணை

இதேபோல வழக்கில் தொடர்புடைய 3 மாணவிகளையும் போலீசார் கல்லூரிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அவர்களிடம் கழிவறையில் ஆபாச வீடியோ எடுத்தது மற்றும் யார் யாரிடம் பகிர்ந்தனர். எப்படி வீடியோ வெளியானது ஆகிய விவரங்களை போலீசார் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து கல்லூரி நிர்வாகிகளிடம் போலீசார் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த விசாரணை தொடரும் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. வேண்டுமென்றால் கல்லூரி மாணவிகளின் ஆண் நண்பர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story