பெங்களூரு மகாதேவபுரா தொகுதியில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு; டி.கே.சிவக்குமார் பரபரப்பு பேட்டி


பெங்களூரு மகாதேவபுரா தொகுதியில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு; டி.கே.சிவக்குமார் பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 13 April 2023 12:15 AM IST (Updated: 13 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு மகாதேவபுரா தொகுதியில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்துள்ளதாக டி.கே.சிவக்குமார் பரபரப்பு தகவலை கூறியுள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ஓட்டு திருடும் நிகழ்வு

பெங்களூருவில் வாக்காளர் பட்டியலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளது. தங்கம், ஆடு, மாடு, கோழிகளை திருடுபவர்களை பார்த்துள்ளோம். ஓட்டுகளை திருடுபவர்களை நாங்கள் பார்த்தது இல்லை. இப்போது ஓட்டு திருடும் நிகழ்வு நடந்துள்ளது. வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து நாங்கள் முன்பு தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தோம். இதுகுறித்து விசாரணைக்கு அந்த ஆணையம் உத்தரவிட்டது.

அதன் பிறகும் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்துள்ளது. குறிப்பாக மகாதேவபுராவில் அதிகளவில் முறைகேடுகள் நடந்துள்ளன. அந்த தொகுதியில் மட்டும் வாக்காளர் பட்டியலில் இருந்து 33 ஆயிரம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. புதிதாக 42 ஆயிரத்து 222 பெயர்கள் 2, 3 இடங்களில் சேர்க்கப்பட்டுள்ளன. ஒருவருக்கு 2 இடங்களில் பெயர் இடம் பெற்றுள்ளது.

தவறு செய்தவர்கள்

அந்த தொகுதியில் 50 சதவீதம் அளவுக்கு மட்டுமே நாங்கள் ஆய்வு செய்துள்ளோம். அதில் இந்த அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து உரிய ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளோம். தேர்தல் ஆணையம் உடனடியாக மகாதேவபுராவில் பணியாற்றும் தேர்தல் அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்ய வேண்டும். தவறு செய்தவர்களை கைது செய்ய வேண்டும்.

தேர்தலில் தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதால் ஆளும் பா.ஜனதா இந்த வேலைகயில் ஈடுபட்டுள்ளது. பெங்களூருவில் அனைத்து தொகுதியிலும் இத்தகைய முறைகேடுகள் நடந்திருக்கும். இதற்காக தேர்தலை ஒத்திவைக்குமாறு நாங்கள் கேட்க மாட்டோம். ஆனால் தேர்தல் நடைபெறுவதற்குள் தவறுகளை சரிசெய்ய வேண்டும். தேர்தலில் சித்தராமையா மற்றும் என் மீது பா.ஜனதாவுக்கு அதிக பயம் உள்ளது.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.


Next Story