சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள ராஜஸ்தானில்சச்சின் பைலட் தனிக்கட்சி தொடங்கப்போகிறாரா? காங்கிரஸ் கட்சி மறுப்பு
சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள ராஜஸ்தானில் சச்சின் பைலட் காங்கிரசில் இருந்து தனிக்கட்சி தொடங்கப்போவதாக வெளியான தகவல்களை அந்தக் கட்சி மறுத்துள்ளது.
புதுடெல்லி,
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. அப்போது முதல்-மந்திரி பதவி யாருக்கு என்பதில் மூத்த தலைவரான அசோக் கெலாட்டுக்கும், இளம் தலைவரான சச்சின் பைலட்டுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. அதில் மேலிடம், அசோக் கெலாட்டுக்கு ஆதரவாக இருந்ததால், அவர் முதல்-மந்திரி ஆனார்.
ஆனால் அதில் இருந்து அவருக்கும், சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
அவ்வப்போது அவர்களிடையே எரிமலை வெடிப்பது போல பிரச்சினை வெடிப்பதும், அதை கட்சி மேலிடம் சமாதானம் செய்து வைப்பதும் தொடர்கதையாகி வருகிறது.
தற்போது, அந்த மாநிலத்தில் முந்தைய வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையிலான பா.ஜ.க. அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று சச்சின் பைலட் கூறி பிரச்சினை எழுப்பி வருகிறார். இதில் அவர் ஒரு நாள் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தினார். பாதயாத்திரையும் நடத்தினார்.
இந்த ஆண்டு இறுதியில் அந்த மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி கட்சி மேலிடம், இரு தலைவர்களையும் டெல்லிக்கு சமீபத்தில் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் மேலிடம் சமரசம் செய்து வைத்ததாக தகவல்கள் வெளியாகின.
இருப்பினும் சச்சின் பைலட் புதுக்கட்சி தொடங்கப்போகிறார், இது குறித்த அறிவிப்பை அவர் தனது தந்தை ராஜேஷ் பைலட்டின் நினைவுநாளில் (நாளை) அறிவிப்பு வெளியிடுவார் என ஊகங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபாலிடம் செய்தி நிறுவனம் ஒன்று கேள்வி எழுப்பியது. அதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:-
நான் வதந்திகளை நம்புவதில்லை. உண்மை என்னவென்றால், காங்கிரஸ் தலைவரும், ராகுல் காந்தியும் அசோக் கெலாட்டுடனும், சச்சின் பைலட்டுடனும் விவாதித்தனர். அதன்பின்னர் அவர்கள் இணைந்து சட்டசபை தேர்தலைச் சந்திப்பார்கள் என்று கூறினோம். இதுதான் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு.
எனக்குத் தெரிந்தவரையில், அவர் தனிக்கட்சி தொடங்குவதுபோன்ற நிலை இல்லை.
அவரை நான் சமீப நாட்களில் சந்தித்துப்பேசி இருக்கிறேன். அப்படி ஒன்றுக்கு வாய்ப்பு இல்லை. இத்தகைய வதந்திகளில் நம்பிக்கை வேண்டாம்.
அவர் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகப்போகிறார் என்று உங்களுக்கு சொன்னது யார்? இதெல்லாம் கற்பனைதான். சட்டசபை தேர்தலை காங்கிரஸ் அங்கு ஒன்றுபட்டு சந்திக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.