பாகிஸ்தானில் இருந்து தோல் நோய் பரவலா? ஜம்முவில் கால்நடைகள் போக்குவரத்துக்கு தடை
ஜம்முவில் தோல் நோய் பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், கால்நடைகள் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் சில பகுதிகளில் தோல் நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுபற்றி ஜம்மு துணை மாஜிஸ்திரேட் அவ்னி லவாசா வெளியிட்டு உள்ள உத்தரவில், பசு, எருது, காளைகள், கன்றுகள் உள்ளிட்டவற்றை கால்நடையாகவோ அல்லது போக்குவரத்து வழியாகவோ ஜம்மு மாவட்டத்திற்குள் கொண்டு வர கூடாது.
இதேபோன்று ஜம்முவில் இருந்து வேறு மாவட்டங்களுக்கும் கொண்டு செல்ல கூடாது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜம்மு மண்டலத்தில் ஏறக்குறைய 6 ஆயிரம் விலங்குகள் பாதிக்கப்பட்டு உள்ளன.
பாகிஸ்தானில் இருந்து தோல் நோய் பரவுகிறது என கூறப்படுகிறது. ஏனெனில், அந்நாட்டில் இந்த பாதிப்புகளால் கால்நடைகளின் உயிரிழப்பு அதிகரித்து இருந்தது. எல்லை மாவட்டங்களில் கடந்த வாரத்தில் 61 கால்நடைகள் உயிரிழந்து உள்ளன.
இதற்கு மருந்துகள் எதுவும் கிடையாது. அதனால், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த தோல் நோய்க்கு இதுவரை 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. 7,300 கால்நடைகள் உயிரிழந்து உள்ளன என 2 நாட்களுக்கு முன் தெரிவிக்கப்பட்டது.
தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் போடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. அதிக தொற்றும் தன்மை கொண்ட இந்த வியாதியானது, ரத்தம் குடிக்கும் பூச்சிகளால் பரப்பப்படுகிறது. இதனால், காய்ச்சல், தோலில் பாதிப்பு உள்ளிட்டவை ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்படுத்துகிறது.