வீட்டு பால்கனியில் நின்று விசில் அடிப்பது பாலியல் துன்புறுத்தலா...? மும்பை ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பு விவரம்


வீட்டு பால்கனியில் நின்று விசில் அடிப்பது பாலியல் துன்புறுத்தலா...? மும்பை ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பு விவரம்
x

வீட்டு பால்கனியில் நின்று விசில் அடித்து, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார் என எதிர்வீட்டுக்காரர்கள் மீது பெண் ஒருவர் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளார்.



மும்பை,


மராட்டியத்தின் மும்பை ஐகோர்ட்டின் அவுரங்காபாத் அமர்வு முன் வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. அதில், பெண் ஒருவரின் நன்னடத்தையை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்டனர் என குற்றச்சாட்டு கூறப்பட்டு இருந்ததற்கு எதிராக 3 பேர் முன்ஜாமீன் கோரி இருந்தனர்.

இதனை, நீதிபதிகள் விபா கன்கன்வாடி மற்றும் அபய் வாக்வேஸ் கொண்ட அமர்வு விசாரணையில் ஈடுபட்டது. இந்த வழக்கில், லட்சுமண், யோகேஷ் மற்றும் சவீதா பாண்டவ் ஆகியோரின் முன்ஜாமீன் மனுக்களை எஸ்.சி. மற்றும் எஸ்.சி. (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழ் நிவாசா செசன்ஸ் நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதற்கு எதிரான மேல்முறையீட்டு மனு மும்பை ஐகோர்ட்டில் அமர்வில் விசாரிக்கப்பட்டது. அவர்கள் 3 பேர் மீது, பெண்ணை பின்தொடருதல், நீண்டநேரம் உற்று நோக்குதல், அமைதியை குலைக்கும் வகையில் தூண்டி விடுதல் மற்றும் குற்றநோக்குடன் செயல்படுதல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இதுபற்றிய எப்.ஐ.ஆர். பதிவில் உள்ள தகவலில், இரு தரப்பினரும் அண்டை வீட்டுக்காரர்கள் ஆவர். அவர்களில் யோகேஷ், பெண்ணை தொடர்ந்து உற்று பார்த்து வந்துள்ளார். அதனை அந்த பெண் தவிர்த்து விட்டு சென்றுள்ளார்.

இதன்பின், யோகேஷ் மொபைல் போனில் பெண்ணை படம் பிடித்து உள்ளார். இதனை பெண்ணின் கணவரும் பார்த்து உள்ளார். இதுபற்றி யோகேஷின் வீட்டு உரிமையாளரிடம் கணவர் புகாராக கூறியும் பலனில்லை.

இதன்பின், யோகேஷ் தரப்பில் சாதிய ரீதியாக அந்த பெண்ணை திட்டியுள்ளனர். வீடியோவை மற்றவர்களிடம் காட்டி யோகேஷ் அவதூறு பரப்பி உள்ளார். அப்போதும், அந்த பெண் அவரை தவிர்த்து வந்துள்ளார்.

ஆனால், கடந்த ஆண்டு மார்ச் 21 மற்றும் 23 ஆகிய தேதிகளில் யோகேஷ் வீட்டு பால்கனியில் நின்றபடி விசில் அடித்ததுடன், தனது வாயை வைத்து அனைத்துவித சப்தங்களையும் எழுப்பியுள்ளார். வாகனத்தின் ஒலியையும் அலற விட்டு உள்ளார்.

யோகேஷ் வீட்டு சி.சி.டி.வி. கேமிரா கூட, பெண்ணின் அனைத்து நடவடிக்கையையும் படம் பிடிக்கும் வகையில் உள்ளது என புகாரில் கூறப்பட்டு உள்ளது. அதன்பின்பு, கடந்த ஆண்டு மார்ச் 24-ந்தேதி யோகேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் கற்களை வீசியதில் பெண்ணுக்கு தலையில் காயம் ஏற்பட்டு உள்ளது.

இதனை பெண்ணின் வீட்டு காவலாளி பார்த்து உள்ளார். சம்பவத்திற்கு சாட்சியாகவும் உள்ளார். இதுபற்றி கேட்க போன இடத்தில் சாதிய வன்மம் எழுந்துள்ளது. கொலை மிரட்டலும் விடப்பட்டு உள்ளது என பெண் தனது புகாரில் கூறியுள்ளார்.

ஆனால், பாண்டவின் வழக்கறிஞர் நர்வாடே கூறும்போது, அந்த பெண் சாதியை தவறாக பயன்படுத்துகிறார். பழி வாங்கும் நடவடிக்கை தவிர வேறெதுவும் இதில் இல்லை என கூறியுள்ளார்.

பாண்டவ் குடும்பத்தினர் வாடகைக்கு இருக்கும் வீட்டை அந்த பெண்ணும், கணவரும் விலைக்கு வாங்க விரும்பி உள்ளனர். ஆனால், வீட்டு உரிமையாளர் அதற்கு தயாராக இல்லை. நாங்கள் புகார் அளித்த பின்னரே அந்த பெண் பதிலுக்கு புகார் கூறியுள்ளார் என தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி நீதிபதிகள் கூறும்போது, ஒரு நபர் தனது வீட்டில் இருந்தபடி எழுப்பும் சத்தத்தின் அடிப்படையில், அந்த பெண்ணுக்கு எதிராக பாலியல் ரீதியான உள்நோக்கத்துடன் அவர் செயல்படுகிறார் என்ற நேரடி முடிவுக்கு நாம் வந்து விடமுடியாது என தெரிவித்தது.

பெண்ணின் எப்.ஐ.ஆர். பதிவில் காலதாமதம் மற்றும் பாண்டவ் தரப்பில் முன்பே புகார் அளித்திருப்பது கவனிக்கத்தக்கது. அதனை புறந்தள்ள முடியாது. பெண்ணும், அவரது கணவரும் கூட பாண்டவ் மற்றும் அந்த தரப்பினரை மொபைல் போனில் படம் பிடித்து உள்ளனர் என கோர்ட்டு சுட்டி காட்டியுள்ளது.

இந்த பெண் சார்பில் ரகசிய நோக்கத்துடனேயே எஸ்.சி. மற்றும் எஸ்.சி. (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழ் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது என்பதற்கான போதிய சான்றுகள் கோர்ட்டில் உள்ளன என கூறி, 3 பேருக்கும் முன்ஜாமீன் வழங்க அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளது.


Next Story