தேர்தல் தோல்விக்கு லிங்காயத் தலைவர்களை புறக்கணித்தது காரணமா?


தேர்தல் தோல்விக்கு லிங்காயத் தலைவர்களை புறக்கணித்தது காரணமா?
x

பா.ஜனதா வியூகங்கள் தோல்வியில் முடிந்த நிலையில் லிங்காயத் சமுக தலைவர்களை அக்கட்சி புறக்கணித்தது காரணமாக சொல்லப்படுகிறது.

பெங்களூரு:-

மக்களின் கோபம்

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலில் ஆளும் பா.ஜனதா 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை காங்கிரசிடம் பறிகொடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சி 136 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. 40 சதவீத கமிஷன், ஊழல் புகார்களால் ஆளுங்கட்சிக்கு எதிராக மக்களின் மனநிலை இருப்பதை பா.ஜனதா தலைவர்கள் சரியாக புரிந்து கொண்டனர்.

அதனால் அக்கட்சி தனிப்பட்ட முறையில் ஆய்வு நடத்தி மக்களின் மனநிலை என்ன என்பதை ஓரளவுக்கு கண்டுபிடித்து அதற்கேற்ப வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்தது. அதன் அடிப்படையில் சரியாக பணியாற்றாத, மக்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ள எம்.எல்.ஏ.க்கள் 15-க்கும் மேற்பட்டோரை பா.ஜனதா கழற்றிவிட்டது. இதில் முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி உள்ளிட்ட முக்கிய தலைவர்களுக்கும் டிக்கெட் மறுக்கப்பட்டது.

பிரதமர் மோடி

இதையடுத்து அவர்கள் 2 பேரும் கடைசி நேரத்தில் காங்கிரசில் சோ்ந்து போட்டியிட்டனர். இந்த முறை தேர்தலில் பிரதமர் மோடி முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மிக தீவிரமான முறையில் பிரசாரம் மேற்கொண்டார். அவர் மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நடைபெற்ற பா.ஜனதா பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார்.

அவர் தனது பேச்சின்போது, 'ஜெய் பஜ்ரங்பலி' என்ற முழக்கத்தை பல முறை கூறினார். மேலும் அவர் விவசாயிகளுக்கு செய்த திட்டங்கள், டிஜிட்டல் புரட்சி, பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட துல்லிய தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்தும் பேசினார். அதே போல் உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரும் கர்நாடகத்தின் மூலை முடுக்கெல்லாம் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் நடத்தினர்.

இட ஒதுக்கீடு ரத்து

பிரசதாரத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா தனது பேச்சின்போது, தலித், பழங்குடியினர், ஒக்கலிகர், லிங்காயத் சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு அதிகரித்து இருப்பதாகவும், மத அடிப்படையில் வழஙகப்பட்ட முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளதாகவும் கூறினார். இந்த இட ஒதுக்கீடு உயர்வால் அந்த சமூகங்களின் ஆதரவு கிடைக்கும் என்று பா.ஜனதா தலைவர்கள் எதிர்பார்த்தனர். லிங்காயத் சமூகம் பா.ஜனதாவின் வலுவான வாக்கு வங்கியாக கருதப்படுகிறது.

அதனால் இந்த முறை தனிப்பெரும்பான்மை பலத்துடன் பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சி தலைவர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் தேர்தல் முடிவு முற்றிலுமாக பா.ஜனதா தலைவர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக அமைந்துள்ளது. இதனால் அக்கட்சி தலைவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மக்கள் நிராகரித்தனர்

இந்த தோல்விக்கு, லிங்காயத் சமூகத்தின் வலுவான தலைவர்களான ஜெகதீஷ் ஷெட்டர், லட்சுமண் சவதி ஆகியோர் கட்சியில் இருந்து விலகியது, பா.ஜனதா அரசு மீதான 40 சதவீத கமிஷன் புகார், ஊழல் குற்றச்சாட்டுகள் போன்றவை தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக லிங்காயத் சமூகத்தின் சக்தி வாய்ந்த தலைவராக இருக்கும் எடியூரப்பாவை முதல்-மந்திரி பதவியில் இருந்து நீக்கியதும் பா.ஜனதாவின் பின்னடைவுக்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. இந்த தேர்தலுக்கு பா.ஜனதா வகுத்த அனைத்த வியூகங்களும் தோல்வியில் முடிவடைந்துள்ளன. இதனால் பிரதமர் மோடியின் தீவிர பிரசாரத்தை கர்நாடக மக்கள் நிராகரித்து காங்கிரசை ஆட்சியில் அமர வைத்துள்ளனர்.


Next Story