அமலாக்கத்துறையின் அதிகார விவகாரம்: கார்த்தி சிதம்பரம் வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ்
அமலாக்கத்துறையின் அதிகார விவகாரம் தொடர்பாக கார்த்தி சிதம்பரம் வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது மற்றும் சொத்து பறிமுதல் போன்ற அதிகாரங்களை அமலாக்கத்துறைக்கு உறுதி செய்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி இருந்தது. இதை மறு ஆய்வு செய்யக்கோரி கார்த்தி சிதம்பரம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது கார்த்தி சிதம்பரம் சார்பில் மூத்த வக்கீல் கபில்சிபல் ஆஜராகி, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் இருக்கும் குறைகளை சுட்டிக்காட்டினார். மேலும் மறு ஆய்வு மனுவை விசாரித்து தீர்ப்பளிக்கும் வரை, இந்த நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதிக்கவும் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் அதிருப்தி தெரிவித்தார். பின்னர் இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கார்த்தி சிதம்பரத்தின் மறு ஆய்வு மனு தொடர்பாக பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.