எங்களது விடுதலைக்காக உயிர் தியாகம் செய்த இந்திய சகோதரர்களை நினைவுகூர்வது கவுரவம்: ஷேக் ஹசீனா பேச்சு
வங்காளதேச சுதந்திர போரின்போது உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் இந்திய வெளிவிவகார மந்திரி எஸ். ஜெய்சங்கர் ஆகியோர் இன்று உதவி தொகை வழங்கினர்.
புதுடெல்லி,
வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக இந்தியாவுக்கு நேற்று முன்தினம் வருகை தந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ஹசீனாவுக்கு நேற்று ஜனாதிபதி மாளிகையில் பாரம்பரிய முறையிலான சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹசீனா, டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இதன்பின்பு, பிரதமர் மோடியுடனான சந்திப்பு நடந்தது. இதில், இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை தலைவர்கள் மறுஆய்வு செய்ததுடன், அவற்றை மேலும் வலுப்படுத்துவதற்கான இருதரப்பு பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டனர். இந்த சந்திப்பின் ஒரு பகுதியாக இரு நாடுகளுக்கு இடையே 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டன.
இந்நிலையில், வங்காளதேச சுதந்திர போரின்போது உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் இந்திய வெளிவிவகார மந்திரி எஸ். ஜெய்சங்கர் ஆகியோர் இன்று உதவி தொகை வழங்கினர்.
இதன்பின் இந்நிகழ்ச்சியில் பேசிய ஹசீனா, 1971-ம் ஆண்டு நடந்த வங்காளதேச விடுதலை போரின்போது உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு நாங்கள் மரியாதை செலுத்தி கொள்கிறோம். எங்களது சுதந்திரம் மற்றும் இறையாண்மைக்காக தங்களது உயிர்களை தியாகம் செய்த இந்திய சகோதரர்கள் மற்றும் போர் வீரர்களை நினைவுகூர்வது என்பது எங்களுக்கு கவுரவம் என பேசியுள்ளார்.
இந்நிகழ்ச்சியில், 10 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் தலா 100 மாணவர்களுக்கு, பங்கபந்து ஷேக் முஜிபுர் ரகுமான் மாணவர் உதவி தொகையானது வழங்கப்பட்டது. எங்களுக்காக உயரிய தியாகம் செய்த இந்திய நாயகர்களுக்கு நாங்கள் செலுத்தும் அஞ்சலி இது என்று அவர் பேசியுள்ளார்.