"அமர்நாத் யாத்திரை செல்பவர்களுக்கு உண்மையான பாதுகாப்பு உணர்வை வழங்குபவர்கள் காஷ்மீர் மக்களே" - மெகபூபா முப்தி
அமர்நாத் யாத்திரை செல்பவர்களுக்கு உண்மையான பாதுகாப்பு உணர்வை வழங்குபவர்கள் காஷ்மீர் மக்களாகிய நாங்கள் தான் என அம்மாநில முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி தெரிவித்து உள்ளார்.
ஸ்ரீநகர்,
அமர்நாத் யாத்திரை நாளை தொடங்க உள்ளது. கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த யாத்திரை நடைபெறுகிறது.
இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக, அமர்நாத் யாத்திரை நிறைவடையும் ஆகஸ்ட் 11-ந் தேதி வரை பாந்தா சௌக் பகுதியில் உள்ள கடைகளை மூடுமாறு அரசு உத்தரவிட்டது. இதற்கு அந்த பகுதி வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும் மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், " இந்த ஆண்டு யாத்திரை 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது. எப்போதும் போல காஷ்மீரிகள் அவர்களை முழு மனதுடன் வரவேற்பார்கள் என்று நான் நம்புகிறேன்.
யாத்திரை செல்லும் வழியில் கடைகளை மூடுவது உள்ளிட்ட கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் இருந்தபோதிலும், யாத்திரிகர்களுக்கு உண்மையான பாதுகாப்பு உணர்வை வழங்குவது காஷ்மீரிகளாகிய நாங்கள்தான்". இவ்வாறு அவா் பதிவிட்டுள்ளார்.