மன் கி பாத் நிகழ்ச்சியை 100 கோடி பேர் ஒரு முறையாவது கேட்டு உள்ளனர் என தகவல்


மன் கி பாத் நிகழ்ச்சியை 100 கோடி பேர் ஒரு முறையாவது கேட்டு உள்ளனர் என தகவல்
x

மன் கி பாத் நிகழ்ச்சியை 100 கோடி பேர் ஒரு முறையாவது கேட்டு உள்ளனர் என ஐ.ஐ.எம். ரோத்தக் இயக்குநர் தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக அக்டோபர் 3-ந்தேதி மன் கி பாத் என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதன்பின்னர், மாதந்தோறும் கடைசி ஞாயிற்று கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

இதன்படி, 2-வது முறையாக பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னரும் இந்த நடைமுறை தொடர்ந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் சமூக மற்றும் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசி வருகிறார்.

பிரதமர் மோடியின் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சி வருகிற ஏப்ரல் 30-ந்தேதி ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது. இதனை வெற்றியடைய செய்யும் நோக்கில், பா.ஜ.க. முழு அளவில் தயாராகி வருகிறது. நிகழ்ச்சியை இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஒலிபரப்ப பா.ஜ.க. முழு அளவில் தயாராகி வருகிறது.

இதுபற்றி பா.ஜ.க. வட்டாரம் தெரிவித்து உள்ள தகவலில், இந்த நிகழ்ச்சியை உலகம் முழுவதும் ஒலிபரப்பு செய்வதற்கான நோக்கம் என்னவெனில், பிரதமர் மோடி உலகளாவிய ஒரு தலைவராக இருக்கிறார்.

பிரதமரின் பணியை அனைத்து நாடுகளும் பாராட்டுகின்றன. அவர் என்ன பேசுகிறார் என கேட்க மக்கள் விரும்புகின்றனர். எங்களது இலக்கு, பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சியை எவ்வளவு நாடுகளுக்கு முடியுமோ அவ்வளவு நாடுகளுக்கு நாங்கள் ஒலிபரப்புவதற்கான நடவடிக்கையை முழு அளவில் செயல்படுத்துவோம் என தெரிவிக்கின்றது.

இந்நிலையில், ஐ.ஐ.எம் ரோத்தக் இயக்குநரான தீரஜ் சர்மா கூறும்போது, பல்வேறு மொழிகளில் ஒலிபரப்பிய மன் கி பாத் நிகழ்ச்சி பற்றிய தரவுகள் சேகரிக்கப்பட்டு உள்ளன. இவற்றில் இந்தி மற்றும் பிராந்திய மொழிகளும் இடம் பெற்று உள்ளன.

15 வயதுக்கு உட்பட்டவர்களையும் நாங்கள் இந்த தரவுகளில் சேர்த்து இருக்கிறோம். மொத்தத்தில் 96% பேர் மன் கி பாத் நிகழ்ச்சியை பற்றி அறிந்திருக்கின்றனர். 100 கோடி பேர் ஒரு முறையாவது, மன் கி பாத் நிகழ்ச்சியை கேட்டு உள்ளனர். 23 கோடி பேர் சீராக இந்நிகழ்ச்சியை கவனித்தும், பார்த்தும் வருகின்றனர் என கூறியுள்ளார்.


Next Story