ஊழல் ஒழிப்பு பற்றி ராகுல் காந்தி பேசுவது வெட்கக்கேடானது; மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி பேட்டி


ஊழல் ஒழிப்பு பற்றி ராகுல் காந்தி பேசுவது வெட்கக்கேடானது; மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி பேட்டி
x
தினத்தந்தி 2 Oct 2022 6:45 PM GMT (Updated: 2 Oct 2022 6:45 PM GMT)

ஊழல் ஒழிப்பு பற்றி ராகுல் காந்தி பேசுவது வெட்கக்கேடானது என்று மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

மத்திய நாடாளுமன்ற விவகாரம் மற்றும் கனிம வளங்கள் துறை மந்திரி பிரகலாத்ஜோஷி உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் 40 சதவீத கமிஷன் அரசு நடைபெறுவதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். அவரது கருத்தை பெரிதாக பொருட்படுத்த வேண்டியது இல்லை. அவர் இந்த ஒற்றுமை பாதயாத்திரை முடிவடைந்தம் ஓய்வு எடுப்பதற்காக வெளிநாட்டிற்கு செல்வார். யார் ஆட்சி செய்ய வேண்டும் என்று மக்கள் ஏற்கனவே முடிவு எடுத்துள்ளனர். முன்பு மத்தியில் 10 ஆண்டுகள் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது, தினமும் ஒரு ஊழல் பகிரங்கமானது. ஆனால் ஊழல் ஒழிப்பு பற்றி ராகுல் காந்தி பேசுவது வெட்கக்கேடானது. மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு மத்திய அரசின் கடன் அதிகரித்துவிட்டதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். யாருடைய ஆட்சி காலத்தில் கடன் அதிகரித்தது என்பது குறித்து புள்ளி விவரங்கள் உள்ளன.

கொரோனா காலத்தில் நாங்கள் சிறப்பான முறையில் செயல்பட்டு அதை நிர்வகித்துள்ளோம். அதனால் இந்திய நாட்டின் பெருமை குறித்து அவதூறான முறையில் பிரசாரம் செய்யக்கூடாது. உத்தரபிரதேச மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் டெபாசிட் இழந்தது. ராகுல் காந்தி மற்றவர்கள் எழுதி கொடுப்பதை படிக்கிறார்.

இவ்வாறு பிரகலாத்ஜோஷி கூறினார்.


Next Story