எதிர்க்கட்சிகளால் அவை முடங்குகிறது என்பது தவறு - திருச்சி சிவா


எதிர்க்கட்சிகளால் அவை முடங்குகிறது என்பது தவறு - திருச்சி சிவா
x

கோப்புப்படம்

எதிர்க்கட்சிகளால் அவை முடங்குகிறது எனக்கூறுவது முற்றிலும் பொய்யானது. பிரதமர் மோடி பொறுப்புணர்வுடன் அவைக்கு வந்து பேசவேண்டும் என்று திருச்சி சிவா தெரிவித்தார்.

புதுடெல்லி,

மாநிலங்களவை தி.மு.க. குழுத்தலைவர் திருச்சி சிவா டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 9 நாட்களாக நாடாளுமன்றத்தின் 2 அவைகளிலும் அவை நடவடிக்கைகள் நடைபெறவில்லை. காரணம் மணிப்பூர் விவகாரம். மணிப்பூரில் இரு குழுக்களுக்கு ஏற்பட்ட மோதல் கலவரமாகி 150 பேர் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காடுகள் மற்றும் முகாம்களில் தங்கி உள்ளனர்.

குறிப்பாக 2 பழங்குடியின பெண்களுக்கு நேர்ந்த வன்கொடுமை உலகத்தையே பதற வைத்தது. மிகப்பெரிய பிரச்சினையாக பார்க்கப்படும் இந்த விவகாரம் தொடர்பாக ஒரு நாட்டின் பிரதமர் இதுவரை ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை. பிரதமர் மோடி 267-வது விதியின் கீழ் விளக்கம் அளிக்கவேண்டும். மற்ற விவாதங்கள் போல மணிப்பூர் தொடர்பான விவாதத்தை ஏற்க முடியாது.

மத்திய அரசு கூறுவது போல, 176-வது விதியின் கீழ் விவாதம் நடத்தப்பட்டால், 2½ மணிநேரம் மட்டுமே விவாதம் நடைபெறும். நேரமின்மை காரணமாக மத்திய அரசு பதிலளிப்பதும் தவிர்க்கப்படலாம்.

எதிர்க்கட்சிகளால் அவை முடங்குகிறது எனக்கூறுவது முற்றிலும் பொய்யானது. பிரதமர் மோடி பொறுப்புணர்வுடன் அவைக்கு வந்து பேசவேண்டும். எதிர்க்கட்சிகள் விவாதத்துக்கு தயாராக இருக்கின்றன என்று அவர் கூறினார்.


Next Story