பெங்களூருவில் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை தீவிரமாக மேற்கொள்ள முடிவு; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி


பெங்களூருவில் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை தீவிரமாக மேற்கொள்ள முடிவு; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
x

பெங்களூருவில் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை தீவிரமாக மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

பெங்களூரு:

வீதியில் தள்ளப்பட்டனர்

பெங்களூருவில் கடந்த 4-ந் தேதி இரவு பெய்த வரலாறு காணாத மழையால் மகாதேவபுரா, பொம்மனஹள்ளி பகுதியில் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதனால் பெரும் கோடீசுவரர்கள் வீதியில் தள்ளப்பட்டனர். தற்போது வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் தண்ணீர் வடிந்துள்ளதால், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பெங்களூருவில் மழை வெள்ள பாதிப்புகளுக்கு காரணமாக உள்ள கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ராஜகால்வாய் மீது கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள், வீடுகள் போன்றவை இடித்து அகற்றப்படும். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெளிவான உத்தரவை பிறப்பித்துள்ளோம். மழை வெள்ளம் ஏற்பட்டபோது ஐ.டி., பி.டி. நிறுவனங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டனர்.

அதனால் கால்வாய் ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படும். சில கட்டிடங்களின் உரிமையாளர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆனால் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்க கோர்ட்டின் உத்தரவையும் பெற்றுள்ளோம். ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக கோர்ட்டும் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதனால் இந்த முறை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை தீவிரமாக மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் எந்த விதமான பாகுபாடும் பார்க்க மாட்டோம்.

எனக்கு தெரியாது

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நியமன தேர்வு முறைகேடு குறித்து பா.ஜனதா எம்.எல்.ஏ. ஒருவரின் ஆடியோ வெளியாகியுள்ளது பற்றி எனக்கு தெரியாது. ஆனால் அதை பரிசீலிப்போம். தேவைப்பட்டால் அதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்படும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.


Next Story