சாமியாருக்கு பாதபூஜை செய்தகாங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.வின் மகள்; பா.ஜனதாவில் சேர திட்டமா?


சாமியாருக்கு பாதபூஜை செய்தகாங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.வின் மகள்; பா.ஜனதாவில் சேர திட்டமா?
x
தினத்தந்தி 20 Sept 2022 12:30 AM IST (Updated: 20 Sept 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

சிக்கமகளூருவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.வின் மகள் சாமியாருக்கு பாதபூஜை செய்தார். இதனால் அவர் பா.ஜனதாவில் சேர திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது.

சிக்கமகளூரு;

2 முறை எம்.எல்.ஏ. ஆனவர்

சிக்கமகளூரு மாவட்டத்திற்கு உட்பட்ட மூடிகெரே தொகுதி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டதாகும். இதுவரை இந்த தொகுதியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள்தான் எம்.எல்.ஏ.க்களாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் கடந்த 2 முறையும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மோட்டம்மா என்பவர் எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். மேலும் அவர் எம்.எல்.சி.யாகவும் பணியாற்றி இருக்கிறார்.

கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மோட்டம்மா தோல்வி அடைந்தார். இதனால் எதிர்வரும் தேர்தலில் தான் போட்டியிடப் போவது இல்லை என்றும், தனக்கு பதிலாக தன்னுடைய மகள் நயனாவை தேர்தலில் நிறுத்தவும் அவர் முடிவு செய்து அறிவித்துள்ளார்.

பாதபூஜை

ஆனால் காங்கிரஸ் மேலிடம் இதுவரை அந்த தொகுதியில் யாருக்கு டிக்கெட் கொடுப்பது என்று முடிவு செய்யவில்லை. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மோட்டம்மாவின் மகள் நயனாவின் வீட்டுக்கு சாமியாரான வினய் குருஜி வந்தார்.

அவருக்கு விசேஷ பூஜைகள் செய்த நயனா, பாத பூஜையும் செய்து வழிபட்டார். பின்னர் வினய்குருஜியிடம் நயனா ஆசியும் பெற்றார். இதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளன.

இந்த நிலையில் நயனா பா.ஜனதாவில் சேர இருப்பதாகவும், அதனால்தான் அவர் இதுபோன்று நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே வினய்குருஜிக்கு பாத பூஜை செய்த நயனாவை தலித் அமைப்பினர் கண்டித்துள்ளனர்.

எதிர்ப்பு

நீங்கள் வணங்க வேண்டியது அம்பேத்கரை என்றும், அதை விட்டுவிட்டு இதுபோன்று நடந்து கொண்டது தவறு என்றும் அவர்கள் குற்றச்சாட்டு கூறிவருகிறார்கள். மேலும் நயனாவின் செயலுக்கு காங்கிரஸ் உள்பட பல்வேறு தரப்பிலும் எதிப்பு கிளம்பி உள்ளது.


Next Story