டிக்கெட் வழங்கும் விஷயத்தில் பா.ஜனதாவுக்கு, ஜெகதீஷ் ஷெட்டர் 'கெடு'


டிக்கெட் வழங்கும் விஷயத்தில் பா.ஜனதாவுக்கு, ஜெகதீஷ் ஷெட்டர் கெடு
x
தினத்தந்தி 15 April 2023 6:45 PM GMT (Updated: 15 April 2023 6:46 PM GMT)

டிக்கெட் வழங்கும் விஷயத்தில் பா.ஜனதா மேலிடத்தின் முடிவுக்காக நாளை வரை காத்திருப்பேன் என்று ஜெகதீஷ் ஷெட்டர் கெடு விதித்துள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை தேர்தல்

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி 212 தொகுதிகளுக்கு பா.ஜனதா வேட்பாளர்களை அறிவித்தது. அதில் மூத்த தலைவர்கள் பலர் கழற்றி விடப்பட்டனர். அதில் முக்கியமானவர் முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் ஆவார். பா.ஜனதாவில் ஜெகதீஷ் ஷெட்டர் நிராகரிக்கப்படுவதன் மூலம் இந்த தேர்தலில் அக்கட்சிக்கு மாநிலம் முழுவதும் 20 முதல் 25 தொகுதிகளில் பாதிப்பு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. இதுபற்றி ஜெகதீஷ் ஷெட்டர் உப்பள்ளியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உரிய மரியாதை

எனக்கு பா.ஜனதா சார்பில் டிக்கெட் வழங்கப்படும் என்றும் நம்புகிறேன். எனக்கு டிக்கெட் வழங்கும் விஷயத்தில் நாளை (அதாவது இன்று) வரை கட்சி மேலிடத்தின் முடிவுக்காக காத்திருப்பேன். உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதி உள்பட 12 முக்கிய தொகுதிகளுக்கு பா.ஜனதா இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. விரைவில் அறிவிப்பார்கள். கட்சி மேலிடத்தின் முடிவை பொறுத்து நான் எனது அடுத்தக்கட்ட நடவடிக்கையை அறிவிப்பேன்.

கட்சியில் மூத்த தலைவர்களுக்கு உரிய மரியாதை இருக்கிறதா என்பதை யோசிக்க தோன்றுகிறது. இதன்மூலம் எதிர்மறையான நிகழ்வுகள் ஏதும் நடந்து விடாமல் இருப்பதை கட்சி மேலிடம் உறுதி செய்திட வேண்டும்.

பாதிப்பை ஏற்படுத்தும்

ஜெகதீஷ் ஷெட்டருக்கு டிக்கெட் வழங்கப்படவில்லை என்றால், அதன் தாக்கம் ஒரு தொகுதியில் மட்டும் எதிரொலிக்காது. வட கர்நாடகத்தில் குறைந்தது 20 முதல் 25 தொகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எடியூரப்பாவே சொல்லி இருக்கிறார். ஆனால் நான்(ஜெகதீஷ் ஷெட்டர்) சொல்கிறேன், 20 முதல் 25 தொகுதிகளில் மட்டுமல்ல, கர்நாடகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இவ்வாறு ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.

இதற்கிடையே ஜெகதீஷ் ஷெட்டருக்கு டிக்கெட் வழங்கவில்லை என்றால் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிடுவோம் என்று உப்பள்ளி-தார்வார் மாநகராட்சி பா.ஜனதா கவுன்சிலர்கள் 16 பேர் மற்றும் கட்சி நிர்வாகிகள் 49 பேர் அறிவித்துள்ளனர். மேலும் அவர்கள் தாங்க கையெழுத்திட்ட ராஜினாமா கடிதத்தையும் அனுப்பி உள்ளனர். இதுபற்றி அவர்கள் கூறுகையில், 'ஜெகதீஷ் ஷெட்டருக்கு டிக்கெட் கிடைக்காததால் நாங்கள் அதிருப்தியும், வேதனையும் அடைந்துள்ளோம். நாங்கள் எடுத்த முடிவு கோபத்தில் எடுத்தது அல்ல' என்று தெரிவித்தனர். இதுபோல் கர்நாடக சட்டசபை முன்னாள் சபாநாயகரும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஆதரவாளர்களுடன் ஆலோசனை

தனது ஆதரவாளர்கள், கவுன்சிலர்கள் ஆகியோருடன் ஜெகதீஷ் ஷெட்டர் ஆலோசனை நடத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் பா.ஜனதா மூத்த தலைவர்கள் சிலர் ஜெகதீஷ் ஷெட்டருக்கு கண்டிப்பாக டிக்கெட் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.


Next Story