டிக்கெட் வழங்காததால் அதிருப்தி: முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் பா.ஜ.க.வில் இருந்து விலகல்


டிக்கெட் வழங்காததால் அதிருப்தி: முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் பா.ஜ.க.வில் இருந்து விலகல்
x
தினத்தந்தி 17 April 2023 12:15 AM IST (Updated: 17 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

டிக்கெட் வழங்காததால் விரக்தி அடைந்த முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டர் அக்கட்சியில் இருந்து விலகினார். அவர் எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்தார். மேலும் அவர் இன்று காங்கிரசில் சேருகிறார்.

பெங்களூரு:

ஜெகதீஷ் ஷெட்டர்

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13-ந் தேதி தொடங்கியது. முதல் நாளில் 221 பேரும், 2-வது நாளில் 200 பேரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில் மனுத்தாக்கல் தொடங்கி 4 நாட்கள் ஆகியும் அரசியல் கட்சிகள் இன்னும் வேட்பாளர் பட்டியலை முழுமையாக வெளியிடவில்லை. மனுத்தாக்கலுக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளன.

ஆளும் பா.ஜனதா இதுவரை 212 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இன்னும் 12 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்க வேண்டியுள்ளது. கட்சியின் மூத்த தலைவர்கள் ஈசுவரப்பா, முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதல்-மந்திரி லட்சமண் சவதி போன்றோருக்கு டிக்கெட் வழங்கப்படவில்லை.

கடும் ஏமாற்றம்

இதனால் கடும் விரக்தியும், ஏமாற்றமும் அடைந்த லட்சுமண் சவதி பா.ஜனதாவை விட்டு விலகி காங்கிரசில் சேர்ந்துவிட்டார். அவரை தொடர்ந்து உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் ஜெகதீஷ் ஷெட்டர் தனக்கு மீண்டும் டிக்கெட் வழங்கியே தீர வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினார். கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா டெல்லிக்கு வரவழைத்து அவருடன் பேசினார். அங்கு அவருக்கு நம்பிக்கை அளிக்கும் தகவல் கிடைக்கவில்லை. அவரை சமாதானப்படுத்தும் பணியில் பா.ஜனதா மேலிட தலைவர்களும், கர்நாடக பா.ஜனதா தலைவர்களும் தீவிரமாக ஈடுபட்டனர்.

மாநிலங்களவை எம்.பி.யாக நியமனம் செய்து மத்திய மந்திரி ஆக்குவதாகவும், குடும்பத்தில் ஒருவருக்கு டிக்கெட் வழங்க கட்சி தயாராக இருப்பதாகவும் அதிருப்தியாளர்களிடம் பா.ஜனதா தலைவர்கள் கூறினர். இதை ஜெகதீஷ் ஷெட்டர் முற்றிலுமாக நிராகரித்துவிட்டார். அதற்கு ஜெகதீஷ் ஷெட்டர், தனது தொகுதியில் இன்னும் செய்ய வேண்டிய பணிகள் இருப்பதாகவும், அதனால் மீண்டும் எம்.எல்.ஏ. ஆக வேண்டி உள்ளதாகவும் திட்டவட்டமாக கூறிவிட்டார்.

சதானந்தகவுடா

ஜெகதீஷ் ஷெட்டரின் இந்த நிலைப்பாட்டை பா.ஜனதா மேலிடம் ஏற்கவில்லை. கட்சியின் முடிவை தாங்கள் ஏற்றே தீர வேண்டும் என்று பா.ஜனதா தலைவர்கள் திட்டவட்டமாக கூறிவிட்டனர். தனக்கு டிக்கெட் கிடைக்காது என்று உறுதியான நிலையில் ஜெகதீஷ் ஷெட்டர் நேற்று காலை சிர்சிக்கு புறப்பட்டு சென்று அங்கு சபாநாயகர் காகேரியை நேரில் சந்தித்து தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து கடிதம் வழங்கினார். பா.ஜனதா கட்சியில் இருந்தும் விலகுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் கடந்த 2008-13-ம் ஆண்டில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்றது. முதல் 3½ ஆண்டுகள் எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்தார். ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து அவர் பதவி விலகியதை அடுத்து சதானந்தகவுடா முதல்-மந்திரி பதவிக்கு வந்தார். அவர் 11 மாதங்கள் முதல்-மந்திரியாக இருந்த நிலையில் திடீரென நீக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அந்த ஆட்சியின் கடைசி ஓராண்டில் ஜெகதீஷ் ஷெட்டர் முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்டார். எடியூரப்பாவின் ஆதரவில் அவர் முதல்-மந்திரி பதவியை அடைந்தார்.

மென்மையாக பேசும்

ஜனசங்க காலத்தில் இருந்தே அவர் பா.ஜனதாவில் இருந்து வருகிறார். வட கர்நாடகத்தில் குறிப்பாக உப்பள்ளி-தார்வார், பெலகாவி, பாகல்கோட்டை, விஜயாப்புரா உள்ளிட்ட மாவட்டங்களில் செல்வாக்கு மிக்க தலைவராக இருக்கிறார். அந்த பகுதியில் லிங்காயத் சமூகத்தின் செல்வாக்கு பெற்ற தலைவராகவும் அவர் இருக்கிறார். மென்மையாக பேசும் வழக்கத்தை கொண்ட அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் பெரிதாக இல்லை. எந்த விதமான சர்ச்சையிலும் சிக்காத தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரசுக்கு வந்தால் வரவேற்போம் என்று சித்தராமையா கூறியுள்ளார். அவர் காங்கிரசில் சேருவது குறித்து தனது ஆதரவாளர்களுடன் உப்பள்ளியில் ஆலோசனை நடத்தினார். பின்னர் உப்பள்ளியில் இருந்து விமானம் மூலம் பெங்களூருவுக்கு வந்த அவர் நேற்று இரவு பெங்களூருவில் கர்நாடக காங்கிரஸ் தலைவர்களை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று (திங்கட்கிழமை) ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரசில் சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் காங்கிரசில் சேரும் பட்சத்தில் உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவார் என்று உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன.

பா.ஜனதாவுக்கு அதிர்ச்சி

வட கர்நாடகத்தில் வலுவான லிங்காயத் சமூகத்தை சேர்ந்த முக்கிய தலைவர்கள் அடுத்தடுத்து விலகி வருவது, பா.ஜனதா தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கட்சிக்கு ஏற்படும் இழப்புகளை ஈடுகட்ட புதிய வியூகம் வகுப்போம் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். பா.ஜனதாவை விட்டு விலகியது குறித்து ஜெகதீஷ் ஷெட்டர் உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பா.ஜனதா கட்சியில் இருந்து நான் விலகி விட்டேன். நான் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது உறுதி. காங்கிரஸ் தலைவர்கள் யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை. எனது ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தி எனது அடுத்தக்கட்ட முடிவை அறிவிப்பேன். இங்குள்ள பா.ஜனதா தலைவர்கள், கர்நாடகத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வருவது வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

உண்மை தெரியவில்லை

பிரதமா் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோருக்கு உண்மை நிலை தெரியவில்லை. பா.ஜனதாவில் நடைபெறும் நிகழ்வுகள், மூத்த தலைவர்களுக்கு கவுரவம் கொடுக்காமல் இருப்பது, கீழ்த்தரமாக பார்ப்பது போன்றவை பா.ஜனதாவை தோற்டிக்கும். இந்த விஷயத்தை பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்ல நான் முயற்சி செய்யவில்லை. அவரே உண்மை நிலையை தெரிந்துகொள்ள வேண்டும்.

சிலரின் சுயநலத்திற்காக பா.ஜனதா கட்சியை பலி கொடுக்கிறார்கள். நான் அனைத்து சாதி-மதங்களை சேர்ந்த மக்களை சமமாக பார்த்துள்ளேன். கட்சி மேலிட தலைவர்களின் அழைப்பின் பேரில் நான் டெல்லிக்கு சென்றேன். அங்கு ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசினேன். அதனால் 2-வது வேட்பாளர் பட்டியலில் எனது பெயர் இடம் பெறும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அதிலும் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இவ்வாறு ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.

ஜெயலலிதாவுடன் பேச்சு நடத்தியவர்

கர்நாடகம்-தமிழ்நாடு இடையே கடந்த 2012-13-ம் ஆண்டு காவிரி நீர் பிரச்சினை தீவிரமாக இருந்தது. சுப்ரீம் கோர்ட்டு ஆலோசனையின் பேரில், அப்போதைய கர்நாடக முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டரை சந்திக்க தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா பெங்களூரு வந்தார். எச்.ஏ.எல். பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் இரு மாநில முதல்-மந்திரிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் அப்போதைய கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரியும், தற்போதைய முதல்-மந்திரியுமான பசவராஜ் பொம்மையும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story