ஜெகதீஷ் ஷெட்டரை காங்கிரசார் பயன்படுத்திவிட்டு தூக்கி எறிவார்கள்; பசவராஜ் பொம்மை சொல்கிறார்
காங்கிரசார் ஜெகதீஷ் ஷெட்டரை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிவார்கள் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
பெங்களூரு:
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
தூக்கி எறிவார்கள்
சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக செல்லும் இடங்களில் அமோக வரவேற்பு கிடைக்கிறது. ஜெகதீஷ் ஷெட்டரை காங்கிரசார் அழைத்து கொண்டிருக்கலாம். ஆனால் எங்கள் கட்சியின் வாக்கு வங்கி எங்களை விட்டு விலகி செல்லாது. பா.ஜனதா மீது ஜெகதீஷ் ஷெட்டர் சில குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். பொதுவாக ஒருவர் கட்சியை விட்டு விலகி செல்லும்போது, இவ்வாறு ஏதாவது ஒரு குற்றச்சாட்டை கட்சி மீது சுமத்துகிறார்கள். அவரது 25 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் ஜெகதீஷ் ஷெட்டருக்கு கட்சி அனைத்து அதிகாரங்களையும் வழங்கியுள்ளது.
அவரை ஓரங்கட்ட எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அவர் கட்சியை விட்டு சென்றுள்ளார். அதனால் எங்கள் கட்சியை அவர் விமர்சித்துள்ளார். அவர் திரும்பி வருவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவர் காங்கிரசில் சேர்ந்துள்ளார். அங்கு முதலில் வரவேற்று பாராட்டுவார்கள். அதன் பிறகு அவமதிப்பார்கள். அவரை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிவார்கள்.
லிங்காயத் மக்கள்
இதே போன்ற நிலை தான் முன்னாள் முதல்-மந்திரிகள் வீரேந்திர பட்டீல், பங்காரப்பா, தேவராஜ் அர்ஸ் போன்ற தலைவர்களுக்கு நோ்ந்தது என்பது அவருக்கு நினைவிருக்கும் என்று நான் நினைக்கிறேன். எடியூரப்பா இருக்கும் வரை லிங்காயத் சமூக மக்கள் பா.ஜனதாவுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.