ஜல் ஜீவன் திட்டம் மூலம் ஆண்டுக்கு 1.36 லட்சம் குழந்தைகள் உயிரிழப்பு தடுக்கப்படும் - சிகாகோ பல்கலைக்கழகம் அறிக்கை
ஜல் ஜீவன் திட்டம் வெற்றியடைந்தால், ஆண்டுக்கு 1.36 லட்சம் குழந்தைகளின் உயிரிழப்புகள் தடுக்கப்படும் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
ஜல் ஜீவன் திட்டம் என்பது மத்திய அரசால் ஆகஸ்ட் 15, 2019 அன்று அறிவிக்கப்பட்டது. 2024ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமப்புற குடும்பங்களுக்கும் பாதுகாப்பான மற்றும் போதுமான குடிநீர் குழாய் இணைப்புகளை வழங்குவதே இந்த பணியின் நோக்கமாகும்.
இதுவரை நாட்டில் 52 சதவீதத்துக்கும் அதிகமான கிராமப்புற குடும்பங்களுக்கு இப்போது குழாய் வழி நீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜல் ஜீவன் திட்டம் வெற்றியடைந்தால், ஆண்டுக்கு 1.36 லட்சம் குழந்தைகளின்(ஐந்து வயதுக்குட்பட்ட) உயிரிழப்புகள் தடுக்கப்படும் என்று சிகாகோ பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வறிக்கையின் துணை ஆசிரியராக நோபல் பரிசு பெற்ற மைக்கேல் கிராமர் உள்ளார். சிகாகோ பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஜல் ஜீவன் மிஷன் மூலம் வழங்கப்படும் நீர் நுண்ணுயிரியல் மாசுபாடு இல்லாததாக இருத்தல் வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுவதன் மூலம், ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் நான்கில் ஒன்றாக குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அசுத்தமான நீரால் ஏற்படும் குழந்தை இறப்பைக் குறைப்பதற்கு, மிகவும் செலவு குறைந்த வழிகளில் ஒன்றாக தண்ணீர் சுத்திகரிப்பு திட்டம் உள்ளது. குழாய் நீர் என்பது நீரின் தரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கியமான வழியாகும்.
அதே வேளையில், பொதுவான ஓரிடத்தில் நீர் சுத்திகரிக்கப்பட்டு பின், குழாய்களில் நீண்ட தூரம் செல்லும்போது, குழாய்களில் எதிர்மறை அழுத்தம் நீர் மாசுபாட்டை ஏற்படுத்தும்.
மத்திய அமைச்சகத்துடன் இணைந்து இந்த முயற்சியில் உதவுவோம். தண்ணீரின் தரத்தை சுத்திகரிப்புக்கான சாத்தியமான தீர்வுகளை பரிசோதிப்பதன் மூலம் இந்த முயற்சியில் நாங்கள் உதவுகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.