ஜனதா தளம் (எஸ்) கட்சியின் 2-வது வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும்; குமாரசாமி பேட்டி
ஜனதா தளம் (எஸ்) கட்சியின் 2-வது வேட்பாளர் பட்டியல் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகும் என்று குமாரசாமி கூறியுள்ளார்.
பெங்களூரு:
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
2-வது கட்ட வேட்பாளர் பட்டியல்
பிரியபட்டணாவில் 105 கிலோ மீட்டர் தூரம் எனது பஞ்சரத்னா யாத்திரை நடைபெற உள்ளது. அங்கு 90 கிராமங்களுக்கு செல்கிறேன். இந்த யாத்திரை முடிந்த பிறகு, ஜனதா தளம் (எஸ்) கட்சியின் 2-வது கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை (இன்று) இறுதி செய்யப்பட்டு வெளியிடப்படும். ஹாசன் தொகுதி வேட்பாளர் யார் என்பதும் முடிவு செய்யப்படும். எந்த பிரச்சினையும் இன்றி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
தேர்தலில் நாங்கள் வெற்றி பெற முழு மூச்சாக பணியாற்றி வருகிறோம். மக்கள் எங்களை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. நான் தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன். அனைத்து மாவட்டங்களுக்கும் பயணிக்க இருக்கிறேன்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.
ஹாசன் தொகுதி டிக்கெட்
முன்னதாக குமாரசாமி, தங்கள் கட்சியின் 2-வது வேட்பாளர் பட்டியல் 6-ந் தேதிக்குள் (நேற்று) வெளியிடப்படும் என்று கூறியிருந்தார். ஹாசன் தொகுதி டிக்கெட் விஷயத்தில் இன்னும் இறுதி முடிவு எடுக்காததால், 2-வது பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொகுதி விஷயம் குறித்து தனது மகன்கள் ரேவண்ணா, குமாரசாமியுடன் தேவேகவுடா ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.