தேசிய அளவில் மக்களின் பிரச்சினைக்கு குரல் கொடுக்க சந்திரசேகரராவின் முயற்சிக்கு ஜனதா தளம் (எஸ்) ஆதரவு; குமாரசாமி பேட்டி
தேசிய அளவில் மக்களின் பிரச்சினைக்கு குரல் கொடுக்க சந்திரசேகரராவின் முயற்சிக்கு ஜனதா தளம் (எஸ்) ஆதரவு அளிப்பதாக குமாரசாமி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவை ஐதராபாத்தில் நேற்று (நேற்று முன்தினம்) நேரில் சந்தித்து நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து விவாதித்தேன். நாட்டு மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு தேசிய அளவில் குரல் கொடுக்க அவர் முடிவு செய்துள்ளார். அவரது இந்த பெருமுயற்சிக்கு ஜனதாதளம் (எஸ்) கட்சி ஆதரவு வழங்கும் என்று உறுதியளித்துள்ளேன். இது 3-வது அணி அல்ல. நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு சந்திரசேகரராவ் தீர்வுகளை வைத்துள்ளார். நான் அவருடன் தனியாக 3 மணி நேரம் ஆலோசனை நடத்தினேன். தனது எண்ணங்களை எப்படி செயல்படுத்துவார் என்பது குறித்து விளக்கினார். விவசாயிகள் மற்றும் 7 முக்கிய நகரங்களின் மேம்பாட்டிற்கு திட்டங்களை அவர் வைத்துள்ளார். ஒரு சிறிய கட்சியாக நானும் எனது அனுபவத்தை அவருடன் பகிர்ந்து கொண்டேன். விவசாயிகள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பதில் அவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.