'ஜனதா தளம்(எஸ்) வேட்பாளரை காணவில்லை'


ஜனதா தளம்(எஸ்) வேட்பாளரை காணவில்லை
x

வருணா தொகுதியில் ‘ஜனதா தளம்(எஸ்) வேட்பாளரை காணவில்லை’ ;தொண்டர்கள் ஆதங்கம் அடைந்துள்ளனர்.

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம்(மே) தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மைசூரு மாவட்டத்தில் உள்ள வருணா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான சித்தராமையா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பா.ஜனதா மந்திரி வி.சோமண்ணா களம் காண்கிறார். இருபெரும் தலைவர்கள் நேரடியாக மோதுவதால் வருணா தொகுதி நட்சத்திர தொகுதியாக உருவெடுத்துள்ளது.

இந்த நிலையில் வருணா தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் அபிஷேக் கவுடா என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். ஆனால் அவரை காணவில்லை என்றும், தொகுதி பக்கமே வருவதில்லை என்றும், யார் கண்ணிலும் சிக்குவதில்லை என்றும் அங்குள்ள ஜனதா தளம்(எஸ்) தொண்டர்கள் கூறிவருகிறார்கள். மிகவும் ஆதங்கத்திலும், கவலையிலும் உள்ள அவர்கள் 'முதல்கட்ட வேட்பாளர் பட்டியலிலேயே வருணா தொகுதியில் அபிஷேக் கவுடா போட்டியிடுவார் என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்து விட்டார்.

அவரை வேட்பாளராக அறிமுகம் செய்து பஞ்சரத்னா யாத்திரையும் நடத்தப்பட்டது. அதன்பிறகு அபிஷேக் கவுடா ஒருநாள் கூட பிரசாரத்திற்காக தொகுதி பக்கம் வரவில்லை. தேர்தல் பிரசாரம், தொண்டர்களுடனான ஆலோசனை கூட்டம், தேர்தல் கூட்டம் இப்படி எதையும் அவர் நடத்தவில்லை. அவரை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்தால் அது சுவிட்ச்-ஆப் என்று வருகிறது. இதனால் நாங்கள் அதிருப்தி அடைந்துள்ளோம். இதுபற்றி கட்சி மேலிடம் மற்றும் குமாரசாமியிடம் புகார் தெரிவித்துள்ளோம்' என்று கூறினர்.

மேலும் அவர்கள் 'வருணா தொகுதியில் சித்தராமையா பிரபலமானவர். அவருக்கு மக்கள் செல்வாக்கு அதிகமாக உள்ளது. அவரை எதிர்த்து போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் வி.சோமண்ணா இங்குள்ள மக்களுக்கு அவ்வளவு அறிமுகம் இல்லாதவர். அபிஷேக் கவுடாவும் பலம் வாய்ந்த வேட்பாளர் இல்லை. இதனால் சித்தராமையா எப்படியும் வெற்றிபெற்று விடுவார் என்றும், அதனால் தான் அபிஷேக் கவுடா பிரசாரத்தில் ஈடுபடாமல் ஒதுங்கி இருப்பதாகவும் தெரிகிறது' என்றனர்.

வருணா தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் யதீந்திரா. இவர் சித்தராமையாவின் மகன் ஆவார். தற்போது யதீந்திரா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு தனது தந்தைக்காக வாக்கு சேகரித்து வருகிறார். பொதுக்கூட்டம், ஆலோசனை கூட்டம், தெருமுனை பிரசாரம் என பம்பரம்போல் சுழன்று பிரசாரத்தில் ஈடுபட்டு ஓட்டுவேட்டை நடத்தி வருகிறார். இதனாலேயே பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் பிரசாரம் செய்வதில் இருந்து சற்று ஒதுங்கி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.


Next Story