10 அடி பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து பெண் சாவு


10 அடி பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து பெண் சாவு
x
தினத்தந்தி 23 Nov 2022 6:45 PM GMT (Updated: 2022-11-24T00:16:38+05:30)

கலசாவில் 10 அடி பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து பெண் உயிரிழந்தார்.

சிக்கமகளூரு:

காபி தோட்ட அதிபர் மகள்

சிக்கமகளூரு மாவட்டம் கலசா தாலுகா ஒசகத்தே கிராமத்தை சேர்ந்தவர் தர்மேந்திரா. சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி அக்‌ஷதா (வயது 35). இத்தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். அக்‌ஷதாவிற்கு ஜீப் ஓட்டுவது என்றால் மிகவும் பிடிக்கும். தந்தை காபி தோட்ட அதிபர் என்பதால், அங்கு அடிக்கடி ஜீப்பில் தனியாக சென்று வந்தார்.

அதன்படி நேற்று ஜீப்பில் காபி தோட்டத்திற்கு சென்று கொண்டிருந்தார். உடன் யாரும் செல்லவில்லை. கலசா மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது, அங்கிருந்த திருப்பம் ஒன்றில் ஜீப்பை திருப்பினார். அப்போது ஜீப் அவரது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தறிகெட்டு ஓடியது. அக்‌ஷதா அந்த ஜீப்பை தனது கட்டுபாட்டிற்கு கொண்டுவர முயற்சித்தார்.

பெண் சாவு

ஆனால் நிற்காமல் சென்ற ஜீப், சாலையோரம் இருந்த 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஜீப் அப்பளம் போல நொறுங்கியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அக்‌ஷதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதற்கிடையில் அந்த வழியாக சென்றவர்கள் இந்த விபத்தை பார்த்து கலசா போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கலசா போலீசார் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் ஜீப்பை மீட்டனர். பின்னர் அந்த ஜீப்பில் இருந்த அக்‌ஷதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கலசா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story