வாடிக்கையாளர்கள் போல நடித்து நகைக்கடையில் கொள்ளை: 4 பேர் கைது


வாடிக்கையாளர்கள் போல நடித்து நகைக்கடையில் கொள்ளை: 4 பேர் கைது
x

உடுப்பியில் வாடிக்கையாளர்கள் போல நடித்து நகைக்கடைகளில் கொள்ளையடித்த வழக்கில் தமிழகத்தை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். செல்போன் சிக்னல் மூலம் போலீசில் பிடிபட்டனர்.

மங்களூரு:-

நகைக்கடையில் கொள்ளை

உடுப்பி மாவட்டம் சிர்வா நகரில் விவேக் ஆச்சார்யா என்பவருக்கு சொந்தமான நகைக்கடை ஒன்று உள்ளது. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 6-ந்தேதி அவரது நகைக்கடைக்கு 2 பேர் வந்துள்ளனர். அவர்கள் வாடிக்கையாளர்கள் போல நடித்து, விவேக் ஆச்சார்யாவின் கவனத்தை திசை திருப்பி, ரூ.1.49 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த விவேக் ஆச்சார்யா, சிர்வா போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் நகைக்கடையில் பதிவாகி இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

நகைக்கடைக்கு வந்தவர்கள் தமிழ் மற்றும் மலையாள மொழியில் பேசியதாக விவேக் ஆச்சார்யா தெரிவித்தார். இதுகுறித்து சிர்வா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர். மேலும், அந்தப்பகுதியில் உள்ள செல்போன் கோபுரத்தில் பதிவான அழைப்புகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

செல்போன் கோபுர சிக்னல் மூலம்....

அப்போது இங்கிருந்து ஒருவர் தமிழ்நாடு திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி மற்றும் சின்னாளபட்டிக்கு பேசி இருந்தார். சின்னாளபட்டியில் பேசிய நபர் நகைக்கடை வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சின்னாளபட்டிக்கு சென்று நகைக்கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, திண்டுக்கல்லை சேர்ந்த ஷனபெல்லா (வயது 45) என்பவர் தங்க கட்டிகள் கொண்டு வந்து கொடுத்ததாக தெரிவித்தார். இதையடுத்து அவரிடம் இருந்து தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்த போலீசார், ஷனபெல்லாவின் செல்போன் எண்ணை வாங்கி, அவர் இருக்கும் இடத்தை போலீசார் கண்டுபிடித்தனர்.

அதாவது ஷனபெல்லா, மங்களூரு உல்லால் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் உல்லாலுக்கு விரைந்து சென்று அங்குள்ள தங்கும் விடுதியில் சோதனை நடத்தினர். அப்போது, விடுதியின் ஒரு அறையில் ஷனபெல்லா உள்பட 4 பேர் இருந்தனர். இதையடுத்து அவர்கள் 4 பேரையும் பிடித்து விசாரித்தனர்.

4 பேர் கைது

விசாரணையில், அவர்கள் திண்டுக்கல்லை சேர்ந்த ஷனபெல்லா, முகமது அலி (32), அஷூர் அலி (32), கணேஷ்குமார் என்பதும், அவர்கள் தான் சிர்வா பகுதியில் உள்ள நகைக்கடையில் வாடிக்கையாளர்கள் போல நடித்து தங்க நகைகளை கொள்ளையடித்தது தெரியவந்தது. இதேபோல், அவர்கள் வாடிக்கையாளர்கள் போல நடித்து நகைக்கடைகளில் கொள்ளையடித்து வந்துள்ளனர். அவ்வாறு கொள்ளையடிக்கும் தங்க நகைகளை திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் உள்ள நகைக்கடையில் விற்று வந்துள்ளனர்.

இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.2.66 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.


Next Story