ஜார்கண்டில் இடஒதுக்கீடு 77 சதவீதமாக உயர்வு சட்டசபையில் மசோதா நிறைவேறியது
7 சதவீதமாக உயர்த்த ஜார்கண்ட் காலியிடங்கள் இடஒதுக்கீடு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.
ராஞ்சி
ஜார்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதாதளம் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அங்கு அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு 60 சதவீதமாக உள்ளது. அதை 77 சதவீதமாக உயர்த்த ஜார்கண்ட் காலியிடங்கள் இடஒதுக்கீடு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. அந்த திருத்த மசோதா, ஜார்கண்ட் மாநில சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
அதை நிறைவேற்றுவதற்காக, நேற்று சட்டசபை சிறப்பு கூட்டம் நடைபெற்றது. அதில், அந்த சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களின் எதிர்ப்புக்கிடையே மசோதா நிறைவேறியது. எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த சில திருத்தங்களும், சட்டசபை குழு பரிசீலனைக்கு அனுப்ப விடுக்கப்பட்ட கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டன. இந்த சட்ட திருத்தத்தை அரசியல் சட்டத்தின் 9-வது அட்டவணையில் சேர்க்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என்றும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
புதிய இடஒதுக்கீட்டின்படி, எஸ்.சி.க்கான இடஒதுக்கீடு 10 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும், எஸ்.டி. இடஒதுக்கீடு 26 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாகவும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு 14 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகவும், இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு 12 சதவீதமாகவும், நலிந்த பொதுப்பிரிவினர் இடஒதுக்கீடு 10 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.