ஜார்க்கண்ட்: ஆட்சியை தக்கவைக்க எம்.எல்.ஏக்களை பாதுகாக்க தொடங்கினார் ஹேமந்த் சோரன்


தினத்தந்தி 27 Aug 2022 10:22 AM GMT (Updated: 27 Aug 2022 10:31 AM GMT)

ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் ஆட்சியை தக்க வைக்க தங்கள் கட்சி எம்.எல்.ஏக்களை பாதுகாக்க தொடங்கினார்.

ராஞ்சி,

ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் கடந்த 2021-ம் ஆண்டு தனது பெயரில் சுரங்க ஒதுக்கீடு பெற்றார். அவர் தனது பதவியை பயன்படுத்தி சட்டவிரோதமாக சுரங்க உரிமத்தை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-க்கு எதிராக முதல்வர் ஹேமந்த் சோரன் செயல்பட்டிருப்பதாக கூறி தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் செய்துள்ளது.

இது தொடர்பான விசாரணையில் ஹேமந்த் சோரன் சுரங்க ஒதுக்கீடு பெற்றது உறுதியானது. இதில் ரூ.100 கோடி மோசடி நடைபெற்றுள்ளதாக கூறப்பட்டது.

நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கியதில் நடந்த முறைகேடு தொடர்பான புகாரில் ஹேமந்த் சோரனை தகுதிநீக்கம் செய்வது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் கருத்தை ஜார்க்கண்ட் மாநில கவர்னர் கேட்டிருந்தார்.

ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரனின் எம்.எல்.ஏ பதவியை தகுதி நீக்கம் செய்ய கவர்னருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இதன்மூலம், ஹேமந்த் சோரனின் எம்.எல்.ஏ பதவி பறிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனையடுத்து, ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரன் இல்லத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் அனைத்து எம்.எல்.ஏக்களும் பங்கேற்றனர்.

இந்த நிலையில், ஜே.எம்.எம் கட்சி எம்.எல்.ஏக்கள் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் 2 பஸ்களில் அழைத்து செல்லப்பட்டனர். அவர்களை மேற்கு வங்காளம் அல்லது சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சொகுசு விடுதியில் தங்கவைக்க ஹேமந்த் சோரன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story