குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என நினைத்து ஜார்கண்ட் தொழிலாளி அடித்து கொலை


குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என நினைத்து ஜார்கண்ட் தொழிலாளி அடித்து கொலை
x
தினத்தந்தி 7 Oct 2022 6:45 PM GMT (Updated: 7 Oct 2022 6:45 PM GMT)

பெங்களூருவில் குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என நினைத்து ஜார்கண்ட் மாநில தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரு:

வாலிபர் உடல் மீட்பு

பெங்களூரு கே.ஆர்.புரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஐ.டி.ஐ. கேட் அருகே கடந்த மாதம் (செப்டம்பர்) 24-ந் தேதி ஒரு வாலிபா் பிணமாக கிடந்தார். அவரது உடலில் காயங்கள் இருந்தது. ஆனால் அவர் யார்?, எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது தெரியாமல் இருந்தது. இதையடுத்து, கே.ஆர்.புரம் போலீசார் மர்மசாவு என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அதே நேரத்தில் ஐ.டி.ஜ. லே-அவுட்டில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி போலீசார் ஆய்வு நடத்தினார்கள். அப்போது ராமமூர்த்திநகரில் இருந்து நடந்து வரும் வாலிபர் ஐ.டி.ஐ. லே-அவுட் பகுதியில் கீழே சுருண்டு விழுந்து உயிரிழக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதையடுத்து, ராமமூர்த்திநகரில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி போலீசார் நடத்திய போது, அதிர்ச்சி அடைந்தாா்கள்.

அடித்து கொலை

அதாவது கடந்த மாதம் 23-ந் தேதி இரவு ராமமூர்த்திநகரில் வைத்து ஒரு கும்பல், அந்த வாலிபரை உருட்டுக்கட்டையால் மற்றும் கையால் அடித்து தாக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அன்றைய தினம் இரவே ரோந்து பணியில் இருந்த ராமமூர்த்திநகர் போலீசாரிடம் வாலிபரை, அந்த கும்பலினர் ஒப்படைத்திருந்தனர். ஆனால் ராமமூர்த்திநகர் போலீசார், வாலிபரிடம் சரியாக விசாரிக்காமல் அனுப்பி வைத்திருந்தார்கள். அவர் அங்கிருந்து ஐ.டி.ஐ. லே-அவுட்டுக்கு வந்த போது தான் கீழே சுருண்டு விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது.

மேலும் அவர், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சஞ்சய் (வயது 33) என்பதும், ராமமூர்த்திநகரில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, கே.ஆர்.புரம் போலீஸ் நிலையத்தில் பதிவான வழக்கு ராமமூர்த்திநகருக்கு மாற்றப்பட்டது. ராமமூர்த்திநகர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

6 வாலிபர்கள் கைது

அப்போது கடந்த மாதம் நாடு முழுவதும் குழந்தை கடத்தும் கும்பல் சுற்றி திரிவது பற்றிய வதந்தி பரவியது. அப்பாவிகளை பிடித்து குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து பொதுமக்கள் அடித்து தாக்கி இருந்தார்கள். அதுபோல், கடந்த மாதம் 23-ந் தேதி இரவும் சஞ்சய் குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவராக இருக்கலாம் என்று நினைத்து 6 வாலிபர்கள் சேர்ந்து அடித்து தாக்கியதுடன், ரோந்து போலீசாரிடமும் ஒப்படைத்திருந்தனர். ஆனால் போலீசார் சரியாக சஞ்சயிடம் விசாரிக்காமலும், அவருக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்காததாலும் கீழே விழுந்து பலியாகி இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

அதே நேரத்தில் சஞ்சயை அடித்து கொன்றதாக 6 வாலிபர்களை ராமமூர்த்திநகர் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story