ஜே.என்.யூ. மாணவர்கள் யூனியன் தேர்தல்; 4 இடங்களிலும் இடதுசாரி கட்சி வெற்றி


ஜே.என்.யூ. மாணவர்கள் யூனியன் தேர்தல்; 4 இடங்களிலும் இடதுசாரி கட்சி வெற்றி
x

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் யூனியன் தலைவர் தேர்தலில் இடதுசாரி கட்சியை சேர்ந்த தனஞ்செய் என்பவர் வெற்றி பெற்றார்.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் யூனியன் தேர்தல் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது. இதில், இடதுசாரி மாணவர் அமைப்பான இந்திய மாணவர் கூட்டமைப்பின் வேட்பாளர் ஐஷே கோஷ் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில், 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜே.என்.யூ.) மாணவர்கள் யூனியன் தேர்தல் நடந்தது. கடந்த 22-ந்தேதி நடந்த இந்த தேர்தலில், 4 இடங்களிலும் இடதுசாரி கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதில், தலைவர் தேர்தலில் இடதுசாரி கட்சியை சேர்ந்த தனஞ்செய் என்பவர் வெற்றி பெற்றார்.

இவர், ஏ.பி.வி.பி. கட்சியின் உமேஷ் சந்திர அஜ்மீராவை வீழ்த்தி 2,598 வாக்குகளுடன் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார். ஜே.என்.யூ. தேர்தல் கமிட்டி தலைவர் சைலேந்திர குமார் இந்த தகவலை வெளியிட்டார். இதன்படி, உமேஷ் 1,676 வாக்குகள் பெற்றார்.

இதேபோன்று, இடதுசாரி கட்சியின் அவிஜித் கோஷ் 2,409 வாக்குகள் பெற்று துணை தலைவராக வெற்றி பெற்றார். பொது செயலாளர் தேர்தலில், 2,887 வாக்குகள் பெற்று பிரியான்ஷி ஆர்யா வெற்றி பெற்றார். இணை செயலாளராக 2,574 வாக்குகள் பெற்று மோ சஜித் வெற்றி பெற்றார்.


Next Story