அக்னிபத் திட்டம்: 4 ஆண்டுகளுக்கு பிறகு ராணுவ வீரர்களின் எதிர்காலம் என்ன? காங்கிரஸ் கேள்வி


அக்னிபத் திட்டம்: 4 ஆண்டுகளுக்கு பிறகு ராணுவ வீரர்களின் எதிர்காலம் என்ன? காங்கிரஸ் கேள்வி
x

பீகாரில் போராட்டக்காரர்கள் தீ வைத்ததில் ரெயில் பற்றி எறியும் காட்சி..

நாட்டை காக்கும் ராணுவ வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்க முடியாத அளவுக்கு நமது நாடு மோசமான நிலையில் உள்ளதா? என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

பெங்களூரு,

ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றில் 4 ஆண்டுகளுக்கு இளைஞர்களை தேர்வு செய்யும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கும் பீகாரில் ராணுவ வேலைவாய்ப்பை எதிர்நோக்கி உள்ள இளைஞர்கள் இன்று 3-வது நாளாக போராட்டம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில், அக்னிபத் திட்டத்தில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு ராணுவ வீரர்களின் எதிர்காலம் என்ன? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தினேஷ் குண்டுராவ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

ராணுவத்திற்கு கடந்த 2 ஆண்டுகளாக ஆட்களை சேர்க்கவில்லை. இப்போது அக்னிபத் என்ற பெயரில் 4 ஆண்டுகளுக்கு மட்டும் ராணுவ வீரர்களை சேர்ப்பதாக அரசு அறிவித்துள்ளது. 4 ஆண்டுகளில் ஓய்வு பெற்ற பிறகு அவர்களின் எதிர்காலம் என்ன?. ராணுவத்தில் சேருகிறவர்களில் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த இளைஞர்கள் தான் அதிகம்.

வசதி படைத்தவர்கள் மற்றும் தேசபக்தி குறித்து மேடைகளில் முழங்கும் தலைவர்களின் பிள்ளைகள் ராணுவத்தில் சேருவது இல்லை. ராணுவத்தில் சேரும் இந்த இளைஞர்களுக்கு பணி பாதுகாப்பு தேவைப்படுகிறது. இதை மத்திய அரசு அறிந்துகொள்ள வேண்டும். ஓய்வு பெற்ற பிறகு ராணுவ வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் இருந்து தப்பித்து கொள்ளும் நோக்கத்தில் இந்த அக்னிபத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

நாட்டை காக்கும் ராணுவ வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்க முடியாத அளவுக்கு நமது நாடு மோசமான நிலையில் உள்ளதா?. ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக பிரதமர் மோடி கூறினார். அதை அவர் செய்யவில்லை. இப்போது அக்னிபத் என்ற பெயரில் நாடகமாடுகிறார்" இவ்வாறு தினேஷ் குண்டுராவ் குறிப்பிட்டுள்ளார்


Next Story