பா.ஜனதா கட்சியின் தலைவராக 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் வரை ஜேபி நட்டா நீடிப்பார் என தகவல்!


பா.ஜனதா கட்சியின் தலைவராக 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் வரை ஜேபி நட்டா நீடிப்பார் என தகவல்!
x

பாஜக தலைவர் பதவிக்கு தேர்தல் நடக்காது, நேரடியாகவே தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதுடெல்லி,

பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வரை அக்கட்சியின் தலைவராக தொடர்ந்து நீடிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஜேபி நட்டா 2019 ஜூலையில் பாஜகவின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து ஜேபி நட்டா, ஜனவரி 2020ம் ஆண்டில் முழுநேர தலைவராக பொறுப்பேற்றார்.

இந்நிலையில், நட்டாவின் மூன்றாண்டு பதவிக்காலம் ஜனவரி 20, 2023 அன்று முடிவடைகிறது. அதைத் தொடர்ந்து அடுத்து வரும் பாஜக தலைவருக்கான, தலைவர் பதவிக்கு தேர்தல் நடக்காது என்றும் நேரடியாகவே தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்றும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பா.ஜ.க.வின் அரசியல் சாசனத்தின்படி, கட்சித் தலைவர் தலா மூன்று ஆண்டுகள் தொடர்ந்து இரண்டு முறை பதவி பெறலாம். நட்டா மீது பிரதமர் மோடியின் நம்பிக்கை உள்ளது மற்றும் அவரது தொடர்ச்சியான சிறந்த செயல்திறனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது.

குஜராத், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 2022ஆம் ஆண்டும், கர்நாடகா, திரிபுரா, மேகாலயா, மிசோரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் 2023ஆம் ஆண்டிலும் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன.இதனை கருத்தில் கொண்டும், இந்த முடிவு எடுக்கப்பட்டது.

முன்னதாக, பா.ஜனதா கட்சியின் முந்தைய தலைவராக இருந்த அமித் ஷாவுக்கும் 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தல் வரை பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து அவர் மந்திரிசபையில் பதவியேற்றார். அவருக்கு அடுத்து நட்டா பா.ஜனதா கட்சியின் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


Next Story