டெல்லி: நீதிபதி மனைவி தூக்கிட்டு தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்


டெல்லி: நீதிபதி மனைவி தூக்கிட்டு தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்
x

டெல்லியில் நீதிபதி மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி,

தலைநகர் டெல்லியின் சகர்ட் பகுதியில் உள்ள கூடுதல் அமர்வு கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வருபவர் அசோக் பெனிவால். இவர் தனது மனைவியுடன் (வயது 42 - பெயர் வெளியிடப்படவில்லை) சகர்ட் பகுதியில் வசித்து வந்தார்.

இதற்கிடையில், நீதிபதி அசோக்கின் மனைவி நேற்று காலை 11 மணியளவில் மார்க்கெட்டிற்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றார். ஆனால், வெகுநேரமாகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த நீதிபதி அசோக் தனது மனைவியை காணவில்லை என இரவு 10 மணியளவில் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அதில், அந்த பெண் ஒரு ஆட்டோவில் ஏறி சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அந்த ஆட்டோ டிரைவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பயணியை ராஜ்பூர் பகுதியில் இறக்கிவிட்டது தெரியவந்தது. அந்த பகுதியில் தான் அந்த பெண்ணின் சகோதரன் வீடு உள்ளது என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து, போலீசாருடன் நீதிபதி அசோக், ராஜ்பூருக்கு சென்று அந்த பெண்ணின் சகோதரன் வீட்டிற்கு சென்றார். வீட்டின் மேல் தளத்தில் பெண்ணின் சகோதரன் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில் கீழ் தளத்தில் உள்ள அறைகள் பூட்டப்பட்டிருந்தது.

இதனால், சந்தேகமடைந்த போலீசார் பூட்டப்பட்டிருந்த ஒரு அறையின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அங்கு நீதிபதி அசோக்கின் மனைவி தூக்கிட்ட நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து, உடலை கைப்பற்றிய போலீசார் பிரேதபரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னர் அசோக்கின் மனைவி எழுதி வைத்துள்ள கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story