கே.ஆர்.புரம் இன்ஸ்பெக்டர் உயிரிழப்புக்கு பா.ஜனதா அரசே பொறுப்பு சித்தராமையா குற்றச்சாட்டு


கே.ஆர்.புரம் இன்ஸ்பெக்டர் உயிரிழப்புக்கு   பா.ஜனதா அரசே பொறுப்பு  சித்தராமையா குற்றச்சாட்டு
x

கே.ஆர்.புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உயிரிழப்புக்கு பா.ஜனதா அரசே பொறுப்பு என்று சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.

பெங்களூரு: கே.ஆர்.புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உயிரிழப்புக்கு பா.ஜனதா அரசே பொறுப்பு என்று சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ஊழலுக்கு ஆவணங்கள்

கர்நாடகத்தில் பா.ஜனதா கட்சி, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சிக்கு வந்தது. அதனால் பா.ஜனதா அரசு ஊழலில் மூழ்கியுள்ளது. இந்த அரசு 40 சதவீத கமிஷன் அரசு என்று ஒப்பந்ததாரர்களே குற்றம்சாட்டியுள்ளனர். பிரதமர் மோடிக்கு எழுத்து மூலமாகவும் அவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். இதுகுறித்து கர்நாடக சட்டசபை கூட்டத்தில் விவாதிக்க இந்த அரசு அனுமதி அளிக்கவில்லை.

ஊழலுக்கு ஆவணங்கள் வழங்குமாறு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கேட்கிறார். இதன் மூலம் அவர் மக்களை திசை திருப்ப முயற்சி செய்கிறார். இந்த 40 சதவீத கமிஷன் புகார் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடுமாறு நாங்கள் கேட்டு வருகிறோம். ஆனால் இந்த அரசு அதை ஏற்க மறுக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் நடக்கவில்லையா? என்று பசவராஜ் பொம்மை கேட்கிறார்.

பணி நியமனங்கள்

அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பா.ஜனதா அதுபற்றி எதுவும் பேசவில்லை. கடந்த 3 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் பா.ஜனதா, நாங்கள் தவறு செய்திருந்தால் அதுபற்றி விசாரணை நடத்தி இருக்க வேண்டும். அதை அவர்கள் செய்யவில்லை. கடந்த 2006-ம் ஆண்டு முதல் இதுவரை நடைபெற்ற ஊழல்கள் குறித்து விசாரிக்க ஒரு நீதி விசாரணை கமிஷனை அமைக்குமாறு நாங்கள் கேட்கிறோம். இதற்கு பா.ஜனதாவினர் யாரும் பதிலளிக்கவில்லை.

ஒப்பந்ததாரர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்ய 40 முதல் 50 சதவீதம் வரை கமிஷன் வழங்க வேண்டும். சப்-இன்ஸ்பெக்டர் பணி நியமனத்தில் முறைகேடு நடக்கவில்லை என்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா கூறுகிறார். அப்படி என்றால் கூடுதல் டி.ஜி.பி. அம்ருத் பால் சிறையல் இருப்பது ஏன்?.

ஆதாரங்கள் இல்லை

40 சதவீத கமிஷன் கேட்டதால் ஒப்பந்ததாரர் சந்தோஷ் பட்டீல் தற்கொலை செய்து கொண்டார். அதனால் மந்திரி பதவியை ஈசுவரப்பா ராஜினாமா செய்தார். இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி ஈசுவரப்பாவுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்களுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தீபாவளி பரிசாக ரூ.3 லட்சம் வரை பணம் கொடுத்துள்ளார். தனது ஊழல்களை எழுத கூடாது என்பது இதன் அர்த்தம்.

கே.ஆர்.புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தீஸ் மாரடைப்பால் உயிரிழந்தார். நகராட்சி நிர்வாகத்துறை மந்திரி எம்.டி.பி.நாகராஜ் அருகில் இருந்து போலீஸ் அதிகாரியிடம் பேசும்போது, ரூ.80 லட்சம் கொடுத்து பணி மாறுதல் பெற்று வந்தால் மாரடைப்பு வராமல் இருக்குமா?. ஊழல்களுக்கு இது சாட்சி இல்லையா?. ஒப்பந்ததாரர் சந்தோஷ் பட்டீல், போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தீஸ் இறப்புக்கு இந்த பா.ஜனதா அரசே பொறுப்பு. முதல்-மந்திரி பதவியில் நீடிக்க பசவராஜ் பொம்மைக்கு தகுதி இல்லை. அவர் உடனே ராஜினாமா செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story