தேர்தல் பிரசாரத்தின் போது கல்வீசி தாக்குதல் காங். வேட்பாளர் பரமேஸ்வர் தலை உடைப்பு
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் களம் நாளுக்கு நாள் புதுப்புது நிகழ்வுகளை சந்தித்து வருகிறது.
பெங்களூரு:-
சட்டசபை தேர்தல்
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களே இருப்பதால் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக கர்நாடகத்தில் முற்றுகையிட்டு தீவிர வாக்கு சேகரித்து வருகிறார்கள். இவ்வாறு வரும் அரசியல் கட்சி தலைவர்கள், எதிர்க்கட்சிகள் மீது குற்றச்சாட்டுகளை கூறி வருவதுடன், அனல் பறக்கும் வார்த்தைகளால் சாடி வருகிறார்கள்.
கல்வீசி தாக்குதல்
இந்த நிலையில் கர்நாடக காங்கிரஸ் முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் நேற்று நடந்துள்ளது. கர்நாடக தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் பற்றிய விவரம் பின்வருமாறு:-
கொரட்டகெரே அருகே பைரேனஹள்ளி கிராமத்தில் பரமேஸ்வர் நேற்று மாலை 5 மணியளவில் பிரசாரம் செய்தார். அந்த சந்தர்ப்பத்தில் 300-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து பரமேஸ்வருக்கு மாலை அணிவித்தும், பூக்களை தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது ஆதரவாளர்கள் பரமேஸ்வரை தோள்களில் தூக்கி வைத்து உற்சாகமாக நடனமாடியபடி இருந்தனர்.
அப்போது மர்மநபர்கள் பரமேஸ்வர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இதில் ஒரு கல் அவரது தலையை பதம் பார்த்தது. இதனால் அவரது தலை உடைந்து ரத்தம் கொட்டியது. உடனே பரமேஸ்வர் தனது கையால் ரத்தம் வெளியேறிய பகுதியில் வைத்து அழுத்தி பிடித்திக்கொண்டார்.
பின்னர் அவரது ஆதரவாளர்கள் அவரை கீழே இறக்கி, அவரை அருகில் உள்ள அக்கிரம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக துமகூருவில் உள்ள சித்தார்த்தா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் கொரட்டகெரே போலீசார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
மேலும் அங்கு திரண்டு இருந்த கிராம மக்கள், காங்கிரஸ் தொண்டர்களிடம் விசாரித்து தகவல்களை கேட்டு பெற்றுக் கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், காங்கிரஸ் வேட்பாளர் பரமேஸ்வர் மீது திட்டமிட்டே மர்மநபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தி இருப்பது தெரியவந்துள்ளது.
பைரேனஹள்ளி கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் கட்சியினர் யாரும் அசம்பாவிதங்களில் ஈடுபடக்கூடாது என்று தலைவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இதுகுறித்து கொரட்டகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.
வேட்பு மனு தாக்கலின் போது...
ஏற்கனவே, பரமேஸ்வர் கடந்த 19-ந்தேதி கொட்டகெரே தாலுகா அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவர் வேட்பு மனு தாக்கல் செய்ய தாலுகா அலுவலகத்திற்குள் சென்ற சமயத்தில் மர்மநபர்கள் கல்வீசி தாக்கினார். இதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பெண் போலீஸ் ஒருவர் தலையில் பலத்த காயம் அடைந்தார்.
சம்பவம் பற்றி கொரட்டகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து கொரட்டகெரே தாலுகா ரெட்டிஹள்ளி அருகே வெங்கடபுரா கிராமத்தை சேர்ந்த ரங்கதம்மய்யா என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
2-வது சம்பவம்
இந்த நிலையில் 2-வது முறையாக நடந்த கல்வீச்சில் வேட்பாளர் பரமேஸ்வர் தலை உடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.