கன்னட திரைப்பட இயக்குனர் எஸ்.கே.பகவான் மரணம்

கன்னட திரைத்துறையின் மூத்த இயக்குனர் எஸ்.கே.பகவான் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள்பட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு:
மரணம் அடைந்தார்
கன்னட திரைத்துறையின் மூத்த இயக்குனர் எஸ்.கே.பகவான் (வயது90). வயோதிகம் காரணமாக அவர் நோய்வாய்ப்பட்டு பெங்களூருவில் உள்ள ஜெயதேவா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலை மரணம் அடைந்தார். அவரின் உடல் ரவீந்திர கலாஷேத்ராவில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு நடிகர் சிவராஜ்குமார் உள்பட கன்னட திரைத்துறையினர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
பகவான் மறைவுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, முன்னாள் முதல்-மந்திரிகள் குமாரசாமி, எடியூரப்பா, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் உள்பட மந்திரிகள், கன்னட திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சூப்பர் ஸ்டார் ராஜ்குமார்
கன்னடத்தில் மறைந்த இயக்குனர் துரைராஜூடன் இணைந்து 27 வெற்றி படங்களை இயக்கியுள்ளார். அவர்கள் 2 பேரும் சேர்ந்து 'துரை பகவான்' என்ற பெயரில் படங்களை இயக்கி வந்தனர். இது மட்டுமின்றி அவர் தனித்தும் பல படங்களை இயக்கி இருக்கிறார். இதில் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் நடித்த படங்களை அவர் அதிகமாக எடுத்துள்ளார்.
அதாவது, 'கஸ்தூரி நிவாச', 'கிரி கன்யே, நானொப்ப கள்ள', 'ஒடஹுட்டிதவரு', 'ஜீவன சைத்ரா', 'யாரிவனு', 'பெங்கிய பாலே', 'ஒசபெலகு', 'முனியமதரி', 'சம்யதா கொம்பே', 'ஆபரேஷன் டைமண்ட் ராக்கெட்', 'கோவாதல்லி சி.ஐ.டி.999', 'ஜத்ரலே பாலே', 'ஜேடர பலே' உள்ளிட்ட படங்கள் அடங்கும். அவர் இயக்கிய படங்கள் அனைத்துமே வெற்றிகரமாக ஓடி 'பாக்ஸ் ஆபிஸ்'சை நிரப்பிய படங்களாக அமைந்துள்ளது.
நீண்ட இடைவேளை
முதல் முறையாக அவர் 1956-ம் ஆண்டு இயக்குனர் கனகல் பிரபாகர் சாஸ்திரியிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார். இதையடுத்து 1966-ம் ஆண்டு 'சந்தியா ராக' என்ற படத்தை அவர் இயக்கினார். நீண்ட கால இடைவேளைக்கு பிறகு அவர் கடைசியாக 2019-ம் ஆண்டு 'ஆடுவ கெம்பே' என்ற படத்தை இயக்கினார். வயதியோகம் காரணமாக அவர் படங்கள் இயக்குவதை நிறுத்தி கொண்டார்.






