திருவனந்தபுரத்தில் களைகட்டிய 'கேரளீயம் திருவிழா'
கேரளாவின் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் 'கேரளீயம் திருவிழா' இன்று தொடங்கியுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளா மாநிலத்தின் மிகப்பெரிய கொண்டாட்டங்களில் ஒன்றாக 'கேரளீயம் 2023' நிகழ்ச்சி கருதப்படுகிறது. திருவனந்தபுரத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியானது நவம்பர் 1ம் தேதி(இன்று) தொடங்கி 7ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கேரளா மாநிலத்தின் முன்னேற்றங்கள், சாதனைகள், கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை உலகிற்கு எடுத்துக்காட்டும் விதமாக இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த விழாவானது ஒரு வாரம் நடைபெற உள்ளது. இதனை கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் இன்று துவக்கி வைத்தார். மேலும் இந்த விழாவில் பல அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள் பலர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுள்ளனர். அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். மலையாள திரையுலகின் நடிகர்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் மூவரும் ஒன்றுபோல பாரம்பரிய உடையான வெள்ளை வேஷ்டி சட்டையில் அமர்ந்து இருக்கும் புகைப்படம் சமூகவலைதளத்தில் வெளியாகி மிக வேகமாக பரவி வருகிறது.
இந்த 'கேரளீயம் 2023' நிகழ்ச்சியில் கருத்தரங்குகள், கண்காட்சி, உணவு திருவிழா என பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தினமும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையில் ஒரு வார காலத்திற்கு இந்த திருவிழா நடைபெறும்.