கர்நாடக சட்டசபை தேர்தல்; எங்களுக்கு கூட்டணி தேவையில்லை, 3-ல் 2 பங்கு மெஜாரிட்டி பெறுவோம்: காங்கிரஸ் அறிவிப்பு
கர்நாடக சட்டசபை தேர்தலில் கூட்டணி எதுவும் எங்களுக்கு தேவையில்லை என்றும் 3-ல் 2 பங்கு மெஜாரிட்டியுடன் வெற்றி பெறுவோம் என்றும் காங்கிரஸ் அறிவித்து உள்ளது.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று முறைப்படி அறிவித்தது. இதன்படி, வருகிற மே 10-ந்தேதி கர்நாடக சட்டசபை தேர்தல் ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்கப்படும். தேர்தலை முன்னிட்டு கர்நாடகாவில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து உள்ளன.
இந்நிலையில், கர்நாடக காங்கிரஸ் தலைவரான டி.கே. சிவக்குமார் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, ஒரே நாளில் தேர்தல் நடத்துவது என்ற அறிவிப்பை கர்நாடக காங்கிரஸ் கமிட்டி வரவேற்க விரும்புகிறது.
மே 10-ந்தேதி ஓட்டு பதிவு நாளாக மட்டுமின்றி, ஊழல், 40% கமிஷன், ஊழலுக்கான மூலதனம் என எல்லாவற்றையும் வேரோடு ஒழிக்கும் நாளாக இருக்கும்.
எங்களுக்கு கூட்டணி எதுவும் தேவையில்லை. நாங்கள் சொந்தமாகவே வெற்றி பெறுவோம். தேர்தலில், 3-ல் 2 பங்கு மெஜாரிட்டியை பெறுவோம் என நான் எதிர்பார்க்கிறேன்.
வருகிற 5-ந்தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி கர்நாடகாவுக்கு வருகிறார். அவர் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது பற்றியோ, சிறைக்கு செல்வது பற்றியோ அல்லது வேறு எதுவும் பற்றியோ கவலையே கொள்ளவில்லை என்று கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி இல்லாமல், நாடு ஒற்றுமையடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.