கர்நாடக சட்டசபையில் பெங்களூரு மாநகராட்சி உள்பட 3 முக்கிய சட்டத்திருத்த மசோதாக்கள் தாக்கல்


கர்நாடக சட்டசபையில் பெங்களூரு மாநகராட்சி உள்பட  3 முக்கிய சட்டத்திருத்த மசோதாக்கள் தாக்கல்
x
தினத்தந்தி 16 Sept 2022 12:15 AM IST (Updated: 16 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக சட்டசபையில் பெங்களூரு மாநகராட்சி உள்பட மூன்று முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

பெங்களூரு:

முக்கிய மசோதாக்கள்

கர்நாடக சட்டசபையில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சார்பில் சட்டத்துறை மந்திரி மாதுசாமி 3 முக்கிய சட்டத்திருத்த மசோதாக்களை தாக்கல் செய்தார். அதாவது பெங்களூரு மாநகராட்சி சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. பெங்களூரு மாநகராட்சியில் உள்ள மொத்த வார்டுகளில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதற்கான அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அந்த அவசர சட்டத்திற்கு பதிலாக இந்த சட்டத்திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

அதேபோல் கர்நாடக கிராம சுவராஜ்ஜிய மற்றும் பஞ்சாயத்து ராஜ் சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதில் மாவட்ட பஞ்சாயத்துகளில் வார்டுகளின் எண்ணிக்கை 25 ஆகவும், வார்டுகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரமாகவும் உயர்த்துவதற்கான அவசர சட்டத்தை அரசு ஏற்கனவே பிறப்பித்தது. இந்த நிலையில் அந்த அவசர சட்டத்திற்கு பதிலாக மாநில அரசு இந்த சட்டத்திருத்த மசோதாவை கொண்டு வந்துள்ளது.

வரி செலுத்துவோர்

மேலும் கர்நாடக சரக்கு-சேவைகள் சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதில் வரி செலுத்துவோருக்கு 'ரீபண்டு' அதாவது வரியை திரும்ப வழங்குவது குறித்த அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த சட்டதிருத்த மசோதாக்கள் இன்று (வெள்ளிக்கிழமை) நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story