மழைக்கால கூட்டத்தொடர் 10 நாட்கள் நடக்கிறது: கர்நாடக சட்டசபை நாளை கூடுகிறது


மழைக்கால கூட்டத்தொடர் 10 நாட்கள் நடக்கிறது:  கர்நாடக சட்டசபை நாளை கூடுகிறது
x

மழைக்கால கூட்டத்தொடருக்கான கர்நாடக சட்டசபை நாளை (திங்கட்கிழமை) பெங்களூரு விதான சவுதாவில் கூடுகிறது. இதில் பெங்களூரு மழை, 40 சதவீத கமிஷன் பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

பெங்களூரு: மழைக்கால கூட்டத்தொடருக்கான கர்நாடக சட்டசபை நாளை (திங்கட்கிழமை) பெங்களூரு விதான சவுதாவில் கூடுகிறது. இதில் பெங்களூரு மழை, 40 சதவீத கமிஷன் பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

நாளை சட்டசபை கூடுகிறது

கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு (2023) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதே நேரத்தில் கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெறலாம் என்ற தகவல்களும் பரவியது. இந்த நிலையில், கர்நாடகத்தில் மழைக்கால கூட்டத்தொடரை நடத்துவது குறித்து கடந்த முறை நடந்த மந்திரிசபை கூட்டத்தின் போது முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தினார்.

அப்போது செப்டம்பர் 12-ந் தேதி (அதாவது நாளை) முதல் வருகிற 23-ந் தேதி வரை நடத்துவது என்று மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, மழைக்கால கூட்டத்தொடருக்காக கர்நாடக சட்டசபை பெங்களூரு விதானசவுதாவில் நாளை (திங்கட்கிழமை) கூடுகிறது. இந்த கூட்டத்தொடர் வருகிற 23-ந் தேதி வரை நடக்கிறது. விடுமுறையான 17 மற்றும் 18-ந் தேதிகள் தவிர 10 நாட்கள் இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.

40 சதவீத கமிஷன் பிரச்சினை

இந்த கூட்டத்தொடருக்கான ஏற்பாடுகளை சபாநாயகர் காகேரி தலைமையில் சட்டசபை அலுவலக அதிகாரிகள் செய்து வருகிறார்கள். நாளை தொடங்கும் மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் மறைந்த மந்திரி உமேஷ்கட்டிக்கு அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. இந்த சட்டசபை கூட்டத்தொடரில் ஆளும் கட்சியை சிக்கலில் சிக்க வைக்க எதிர்க்கட்சியான காங்கிரஸ் தயாராகி வருகிறது. அதாவது மாநிலத்தில் அரசு பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரர்களிடம் இருந்து மந்திரிகள் 40 சதவீத கமிஷன் கேட்பதாக ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

இந்த பிரச்சினையை எழுப்பி அரசுக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக எதிர்க்கட்சி தலைவரான சித்தராமையா மற்றும் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், 40 சதவீத கமிஷன் பிரச்சினையை சட்டசபையில் எழுப்புவோம் என்று தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தை எழுப்பி கமிஷன் விவகாரத்தில் சிக்கிய மந்திரி முனிரத்னா உள்ளிட்ட சிலரை ராஜினாமா செய்யும்படி வலியுறுத்தவும் காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெங்களூருவில் மழை பாதிப்பு

அதே நேரத்தில் தற்போது பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மழையால் பெங்களூரு நகரமே மூழ்கி இருக்கிறது. ஐ.டி. நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால், அந்த நிறுவனங்கள் பெங்களூருவை விட்டு வெளியேறுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளன. அதே நேரத்தில் குடகு, சிக்கமகளூரு, பெலகாவி, உடுப்பி உள்ளிட்ட பல மாவட்டங்களில் விவசாய பயிா்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்துள்ளது.

இதையடுத்து, மழை-வெள்ள பாதிப்பு பிரச்சினைகளை எழுப்பவும் காங்கிரஸ் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். ராமநகரில் மழை பாதித்த மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படாமல் இருப்பதால், அந்த பிரச்சினையை எழுப்ப ஜனதாதளம் (எஸ்) கட்சி மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி திட்டமிட்டுள்ளார். மழை பாதிப்பு பிரச்சினையை சட்டசபையில் எழுப்பி, மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசை வலியுறுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

பதிலடி கொடுக்க பா.ஜனதா தயார்

அதே நேரத்தில் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் எழுப்பும் பிரச்சினைகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மூத்த மந்திரிகளுடன் அவர் ஆலோசனையும் நடத்தி உள்ளார். அதாவது கடந்த காங்கிரஸ் ஆட்சியில் முதல்-மந்திரியாக இருந்த போது நடந்த மின்சார துறை ஊழல், அர்க்காவதி நில முறைகேடு, அன்னபாக்யா திட்ட முறைகேடு உள்ளிட்டவற்றை அம்பலப்படுத்துவோம் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்திருக்கிறார்.

மேலும் காங்கிரஸ் ஆட்சியில் மின்சார துறையில் கூடுதல் விலைக்கு நிலக்கரி கொள்முதல் செய்தது, சோலார் மின் திட்டத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பான ஆவணங்களை சேகரித்து வருவதாகவும், அதனை சட்டசபை கூட்டத்தொடரில் அம்பலப்படுத்துவோம் என்று மின்சார துறை மந்திரி சுனில்குமார் மற்றும் பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளனர்.

144 தடை உத்தரவு

இதன் காரணமாக இந்த கூட்டத்தொடரில் ஆளும் பா.ஜனதா மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே அனல்பறக்கும் விவாதங்கள் நடைபெற உள்ளது.

சட்டசபை கூட்டத்தொடர் தொடங்குவதையொட்டி பெங்களூரு விதானசவுதாவை சுற்றி 2 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.


Next Story