"777 சார்லி'' படத்தை பார்த்துவிட்டு கதறி அழுத கர்நாடக முதல்-மந்திரி! உணர்ச்சிப்பூர்வமான படம் என பாராட்டு
ஒரு மனிதனுக்கும் அவனது நாய்க்கும் இடையேயான பிணைப்பை கருவாக கொண்டு இப்படத்தின் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு,
'777 சார்லி' திரைப்படம் ஜூன் 10 அன்று ஐந்து மொழிகளில் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. ரக்ஷித் ஷெட்டி நடித்த இப்படம் ரூ. 20 கோடி வசூலித்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. ஒரு மனிதனுக்கும் அவனது நாய்க்கும் இடையேயான பிணைப்பை கருவாக கொண்டு இப்படத்தின் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 777 சார்லி படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்த கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையால் தன் நாயை நினைத்துக் கண்ணீரை அடக்க முடியவில்லை. அவர் அழுதுகொண்டே வெளியேறும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இந்த படத்தை பார்த்துவிட்டு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியதாவது, "நாய்களைப் பற்றிய திரைப்படங்கள் நிறைய உள்ளன. ஆனால் இது மிகவும் உணர்ச்சிகரமான படம். இந்த திரைப்படம் உணர்ச்சிகள் மற்றும் விலங்குகளுடன் ஒத்திசைக்கப்பட்டுள்ளது.
நாய் தன் உணர்வுகளை கண்களால் அருமையாக வெளிப்படுத்துகிறது. நான் நிபந்தனையற்ற அன்பை பற்றி தொடர்ந்து பேசுகிறேன். நாயின் அன்பு என்பது தூய்மையான நிபந்தனையற்ற அன்பு.படம் மிகவும் நன்றாக உள்ளது. அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என கூறினார்.
பசவராஜ் பொம்மைக்கு நாய்கள் மீது எப்போதும் மிகுந்த பிரியம் உண்டு. கடந்த ஆண்டு தனது செல்ல நாய் இறந்ததால் அவர் மனம் உடைந்து அழுத சம்பவம் இதற்கு சிறந்த உதாரணம் ஆகும். இறந்து போன தங்கள் வீட்டு செல்லப்பிராணிக்கு, அவருடைய குடும்பத்தினர் ஒன்றாக, இறுதி மரியாதை செய்த சம்பவம் மனதை நெகிழச் செய்தது குறிப்பிடத்தக்கது.