சித்தராமையாவின் பதவி ஏற்பு விழா; மைதானத்தில் பொதுமக்கள் மீது போலீஸ் தடியடி


சித்தராமையாவின் பதவி ஏற்பு விழா; மைதானத்தில் பொதுமக்கள் மீது போலீஸ் தடியடி
x

இன்று காலையில் பதவி ஏற்பு விழாவுக்கு ஒரே நேரத்தில் ஏராளமான மக்கள் மைதானத்திற்குள் செல்ல முயன்றதால் தள்ளுமுள்ளு உண்டானது.

பெங்களூரு,

பெங்களூரு கன்டீரவா மைதானத்தில் இன்று நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமாரும், இதுதவிர 8 பேர் மந்திரிகளாகவும் பதவி ஏற்றுக் கொண்டு இருந்தனர். இந்த பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்தும் மக்கள் திரண்டு வந்திருந்தார்கள். பாஸ் இல்லாமல் வந்த மக்கள் கன்டீரவா மைதானத்தின் 3-வது மற்றும் 4-வது நுழைவு வாயில் வாயிலாக செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், இன்று காலையில் பதவி ஏற்பு விழாவுக்கு ஒரே நேரத்தில் ஏராளமான மக்கள் மைதானத்திற்குள் செல்ல முயன்றதால் தள்ளுமுள்ளு உண்டானது.

இதையடுத்து, மக்களை கட்டுப்படுத்த முயன்றும் போலீசாரால் முடியவில்லை. இதையடுத்து, நிலைமை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக போலீசார் தடியடி நடத்தினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், தள்ளுமுள்ளு மற்றும் போலீஸ் தடியடி காரணமாக 2 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் 2 பேரையும் மீட்டு அருகில் இருந்த ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை கொடுக்கப்பட்டது. அதன்பிறகு, 2 நுழைவு வாயில்களிலும் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து, கூட்ட நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்படுவது தடுக்கப்பட்டது.


Next Story