கர்நாடக தேர்தல் வெற்றி, நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும்...! ராகுல்காந்தி பிரதமராவார் - சித்தராமையா நம்பிக்கை


கர்நாடக தேர்தல் வெற்றி, நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும்...! ராகுல்காந்தி பிரதமராவார் - சித்தராமையா நம்பிக்கை
x
தினத்தந்தி 13 May 2023 2:23 PM IST (Updated: 13 May 2023 2:25 PM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையுன் ஆட்சி அமைக்க உள்ளது

பெங்களூரு,

கர்நாடகா சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 129 இடங்களிலும், பாஜக 68 இடங்களிலும், மஜத 22 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

இதன் மூலம் 129 தொகுதிகளில் முன்னிலையில் உள்ள காங்கிரஸ் கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையுன் ஆட்சி அமைக்க உள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா தேர்தல் வெற்றி குறித்து கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சி 120 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். இது ஆரம்ப கட்டம் தான். இன்னும் பல சுற்று வாக்குகள் எண்ண வேண்டும். எனவே காங்கிரஸ் 120 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றும். . மோடியோ, அமித்ஷாவோ, ஜே.பி. நட்டாவோ கர்நாடகாவுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் வரட்டும் என்று நான் சொல்லிக் கொண்டு இருந்தேன்.

அவர்களது பிரசாரத்தால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. ஏனென்றால் கர்நாடக மக்கள் பா.ஜனதாவின் ஊழல், தவறான நிர்வாகத்தால் அலுத்துவிட்டனர். மக்கள் விரோத செயலில் பா.ஜனதா ஈடுபட்டது. பா.ஜனதா ஆட்சியில் எந்த வளர்ச்சி பணிகளும் இல்லாததால் மக்களும் அந்த கட்சியால் மகிழ்ச்சி அடையவில்லை. மக்கள் மாற்றத்தை விரும்பினர். அதற்கேற்ப தீர்ப்பை வழங்கியுள்ளனர். கர்நாடக தேர்தல்

வெற்றி, நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் . ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கேவுக்கு நன்றி .நாடாளுமன்ற தேர்தலில் வென்று ராகுல்காந்தி பிரதமராவார்

இவ்வாறு சித்தராமையா கூறியுள்ளார்.


Next Story