கர்நாடக தேர்தல்; பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் தயாராக உள்ளதாக தகவல்


கர்நாடக தேர்தல்; பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் தயாராக உள்ளதாக தகவல்
x

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சி ஏற்கனவே 124 தொகுதிகளுக்கு முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. 2-வது கட்டமாக 60 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணியில் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

வேட்பாளர்கள் பட்டியல் தயாரிப்பில் பா.ஜனதாவும் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக மாவட்ட அளவில் உள்ள நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு வருகின்றனர். அதே நேரத்தில் பெங்களூரு புறநகரில் உள்ள ஓட்டலில் பா.ஜனதா ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் 125 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை கர்நாடக தலைவர்கள் தயார் செய்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

அந்த 125 தொகுதிகளுக்கான பட்டியலை பா.ஜனதாவின் மத்திய தேர்தல் குழுவுக்கு அனுப்பி வைக்க உள்ளனர். அதனை மேலிட தலைவர்கள் பரிசீலித்துவிட்டு, வருகிற 8 அல்லது 9-ந் தேதி 125 பேர் அடங்கிய முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

அதே நேரத்தில் பிரச்சினைகள் இருக்கும் தொகுதிகளுக்கு 3 பிரமுகர்களின் பெயர்களை மேலிடத்திற்கு சிபாரிசு செய்யும்படியும் கர்நாடக தலைவர்களுக்கு, மேலிடம் உத்தவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் 3 பேரில் ஒருவரை வேட்பாளராக அறிவிக்க பா.ஜனதா தீர்மானித்துள்ளததாக தெரிகிறது.


Next Story