கர்நாடக உணவுத்துறை மந்திரி உமேஷ் கட்டி திடீர் மரணம்


கர்நாடக உணவுத்துறை மந்திரி  உமேஷ் கட்டி திடீர் மரணம்
x

கர்நாடக உணவுத் துறை மந்திரி உமேஷ் கட்டி மாரடைப்பால் நேற்றிரவு திடீரென்று மரணம் அடைந்தார்.

பெங்களூரு: கர்நாடக உணவுத் துறை மந்திரி உமேஷ் கட்டி மாரடைப்பால் நேற்றிரவு திடீரென்று மரணம் அடைந்தார்.

உணவுத்துறை மந்திரி உமேஷ் கட்டி

கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் தலைமையிலான பா.ஜனதா அரசு நடந்து வருகிறது. இதில் வனம் மற்றும் உணவுத்துறை மந்திரியாக பணியாற்றி வந்தவர் உமேஷ் கட்டி. அவருக்கு வயது 61. பா.ஜனதா மூத்த தலைவரான இவர், பெலகாவி மாவட்டம் உக்கேரி தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் பெங்களூரு டாலர்ஸ் காலனி இல்லத்தில் வசித்து வந்தார். நேற்று வழக்கமான அலுவல் முடிந்து வீடு திரும்பிய மந்திரி உமேஷ் கட்டிக்கு இரவு 10 மணி அளவில் திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது.

மாரடைப்பால் மரணம்

உடனே அவரை அவரது குடும்பத்தினர் பெங்களூரு எம்.எஸ். ராமையா மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருப்பதை கண்டறிந்தனர். உடனே அதற்காக அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.மறைந்த மந்திரி உமேஷ் கட்டி 9 முறை தேர்தலில் போட்டியிட்டு 8 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். ஒரு முறை 800 ஓட்டுகளில் வெற்றி வாய்ப்பை இழந்தார். 6 முறை இவர் கட்சி மாறியுள்ளார்.

வடகர்நாடகத்தை தனிமாநிலமாக அறிவிக்க கோரி அவ்வப்போது அவர் போர்க்கொடி தூக்கி வந்தார். அத்துடன் கர்நாடக முதல்-மந்திரியாக ஆகும் தகுதி தனக்கு இருப்பதாகவும் கூறி சர்ச்சையை எழுப்பி வந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

இரங்கல்

இவரது மறைவுக்கு முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, மந்திரிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நேரில் அஞ்சலி

இதற்கிடையே முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை நேற்றிரவு 1.15 மணி அளவில் எம்.எஸ்.ராமையா மருத்துவமனைக்கு சென்று உமேஷ் கட்டியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அத்துடன் மந்திரி உமேஷ் கட்டியின் குடும்பத்தினருக்கு பசவராஜ்பொம்மை ஆறுதல் கூறினார். அதுபோல் மந்திரிகள் ஆர்.அசோக், அஸ்வத் நாராயண் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மருத்துவமனைக்கு சென்று உமேஷ் கட்டி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதையொட்டி மருத்துவமனை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மறைந்த உமேஷ் கட்டியின் உடலுக்கு இன்று (புதன்கிழமை) இறுதிச்சடங்கு நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.


Next Story