காதலித்த மகளை ஆணவக் கொலை செய்த தந்தை; காதலன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை


காதலித்த மகளை ஆணவக் கொலை செய்த தந்தை; காதலன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
x
தினத்தந்தி 28 Jun 2023 4:18 PM IST (Updated: 28 Jun 2023 4:32 PM IST)
t-max-icont-min-icon

கீர்த்தியை செவ்வாய்க்கிழமை அன்று காலை அவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி, கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்

கோலார்:

கர்நாடக மாநிலம் கோலார் பகுதி போடகுர்கி என்ற கிராமத்தை சேர்ந்தவர் கீர்த்தி ( 20). கீர்த்தி அதே கிராமத்தை கங்காதர்(24) என்பவரை காதலித்து வந்துள்ளார். கங்காதர் தினக்கூலியாக பணியாற்றி வந்துள்ளார். அவர் தப்பாட்ட கலைஞர் எனவும் தெரிகிறது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.

கீர்த்தி - கங்காதர் காதல் விவகாரம் கீர்த்தியின் வீட்டிற்கு தெரியவந்துள்ளது. வேறு சமூகத்தை சேர்ந்த கங்காதரை காதலிக்க வேண்டாம் என கீர்த்தி வீட்டில் சொல்லியுள்ளனர். இது தொடர்பாக கீர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இடையே கடந்த திங்கள் அன்று மாலை வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. கங்காதரை திருமணம் செய்து கொள்வதில் கீர்த்தி உறுதியாக இருந்துள்ளார்.

இதையடுத்து கீர்த்தியை செவ்வாய்க்கிழமை அன்று காலை அவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி, கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் செவ்வாய் அன்று காலை 6 மணி அளவில் நடந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

கீர்த்தி கொலை செய்யப்பட்ட செய்தியை அறிந்த கங்காதர், கீர்த்தியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி உள்ளார். மிகுந்த வருத்தத்தில் இருந்த அவருக்கு ஆறுதல் கொடுக்கும் விதமாக அவரது சகோதரர் அவரை பைக்கில் அழைத்து சென்றுள்ளார்.

அப்போது பைக்கை நிறுத்த சொன்ன கங்காதர், அந்தப் பகுதியில் வேகமாக சென்ற ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் குறித்து கம்மசமுத்ரா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story